- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்க கேரியரை கெடுத்த தோனியை சபிக்கிறேன் – ரசிகரின் கோபத்துக்கு இர்பான் பதான் கொடுத்த நெகிழ்ச்சியான பதில்

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், அதிரடியான பினிஷர், 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் போன்ற பல பரிணாமங்களை கொண்ட ஜாம்பவானாக போற்றப்படுகிறார். அதனால் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் அதற்கு சமமாக “செல்பிஷ்”, “ஒற்றை கையில் உலக கோப்பையை வென்றவர்” போன்ற விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். அந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம் என்னவெனில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011 உலகக்கோப்பையை வென்ற அவர் அடுத்த தலைமுறைக்கும் தரமான வீரர்களை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில கடினமான முடிவுகளை எடுத்தார்.

அதற்காக 2011 உலகக் கோப்பைக்குப் பின் சேவாக், கம்பீர், ஹர்பஜன் போன்ற சீனியர் வீரர்களை கழற்றிவிட துவங்கிய அவர் விராட் கோலி, ரோகித் சர்மா, அஷ்வின் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை வைத்து 2013இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டினார். சொல்லப்போனால் தற்போது விளையாடும் இந்திய அணியில் இருக்கும் 70% மேற்பட்ட வீரர்கள் தோனியால் கண்டறியப்பட்டு அவரது தலைமையில் வாய்ப்பையும் ஆதரவையும் பெற்று வளர்ந்தவர்கள். அந்த வகையில் இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த அவர் அதற்காக எடுத்த கடினமான முடிவுகளில் சில நட்சத்திர வீரர்களை தைரியமாக கழற்றி விட்டதாலேயே விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

இர்பான் வாழ்க்கை:
ஒருவேளை அதுபோன்ற முடிவெடுக்காமல் போயிருந்தால் தற்சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகள் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தவிப்பது போல இந்தியாவும் தவித்துக் கொண்டிருக்கும் என்பது தோனியை விமர்சிப்பவர்களிடம் ஆதாரத்துடன் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது வேறு கதை. அதனால் சேவாக், கம்பீர் ஆகியோரது கேரியரை முடித்தவர் என்ற அவப்பெயருக்கு தொடர்ந்து தோனி உள்ளாகி வருகிறார். முன்னதாக அதே காலகட்டத்தில் நல்ல ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்த இர்பான் பதானும் 2012க்குப்பின் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டார்.

அதுபோக ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சிகளும் நடைபெற்றது. அதில் ரவீந்திர ஜடேஜா 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகளை எடுத்து கோல்டன் பந்து விருதை வென்று அசத்தலாக செயல்பட்டதால் அந்தத் தொடரில் இடம் பிடித்திருந்த இர்பான் பதான் அத்துடன் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அதன்பின் ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படாத காரணத்தால் இந்திய அணியிலிருந்து வெகுதூரம் சென்ற அவர் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்று வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் சமீப காலங்களாக விளையாடி வரும் அவர் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதை பார்த்த அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் லெஜெண்ட்ஸ் தொடரில் இர்பான் பதான் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் 2012இல் இந்தியாவுக்காக தன்னுடைய 29 வயதில் கடைசியாக விளையாடியிருந்த அவரை கழற்றி விட்டு ஸ்டுவர்ட் பின்னி போன்றவருக்கு வாய்ப்பு வழங்கிய தோனி மற்றும் அணி நிர்வாகத்தை சபித்து வருவதாக தனது ஆதங்கத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தினார்.

ரசிகர்களிடம் வைரலான அந்த ட்வீட்டை பார்த்த இர்பான் பதான் “யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம். உங்களது அன்புக்கு நன்றி” என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளது அனைவரின் நெஞ்சங்களை தொட்டுள்ளது. அதாவது நாட்டுக்காக தம்மை விட சிறந்த வீரரை தேடிய தோனியின் பயணம் முடிந்த கதை என்பதால் அதற்காக அவரைக் குற்றம் சொல்ல வேண்டாம் என்று ரசிகர்களிடம் இர்பான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதை பார்க்கும் ரசிகர்கள் 2007 டி20 உலகக் கோப்பை பைனல், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் 3 பந்தில் ஹாட்ரிக் எடுத்தது போன்ற மறக்க முடியாத செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவருக்கு தோனி மற்றொரு வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம் என்று மீண்டும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இருப்பினும் 2013இல் இர்ஃபான் பதானை கழற்றி விட்டு 2014இல் பின்னிக்கு வாய்ப்பு கொடுத்ததில் அவரும் சொதப்பியதால் அவரையும் கழற்றிவிட்ட தோனி 2016இல் ஹர்டிக் பாண்டியாவை கண்டறிந்து வாய்ப்பளித்து இந்தியாவுக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by