பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் அங்க தான் பிரச்சனையே இருக்கு – இந்திய அணியை எச்சரிக்கும் இர்பான் பதான்

- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தர வரிசையில் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் வழக்கம் போல சொதப்பி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு 2024 டி20 உலக கோப்பைக்கு தள்ளிப் போயுள்ளது. அதை விட இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு சிலரை தவிர்த்து சுமாராக செயல்பட்ட ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்குமாறு கோரிக்கைகள் குவிந்துள்ளன.

Hardik Pandya IND vs ENg

அந்த வகையில் துடிப்பான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருப்பதுடன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்தி 2022 ஐபிஎல் கோப்பையை முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐபிஎல் கோப்பையை வென்று கம்பேக் கொடுத்த அவர் சமீப காலங்களில் நடைபெற்ற இங்கிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

பிரச்சனை இருக்கு:

எனவே இளமையும் நல்ல அனுபவமும் திறமையும் பெற்றுள்ள அவரது தலைமையில் இளம் அணியை உருவாக்குவதற்கான வேலையை ஏற்கனவே துவங்கியுள்ள பிசிசிஐ அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்து டி20 தொடரில் கேப்டனாக அறிவித்துள்ளது. மேலும் நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அடுத்த கேப்டனாக அவர் வருவதற்கு ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிரட்டிய பாண்டியா காயத்துக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் தவிப்பதுடன் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது தேவையான நேரத்தில் மட்டுமே பந்து வீசுகிறார்.

Pandya

அத்துடன் இந்த உலகக் கோப்பையில் கூட முக்கியமற்ற போட்டிகளில் ஓய்வெடுத்த அவர் அடிக்கடி காயத்தை சந்திப்பவராக இருப்பதால் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் பும்ரா போல காயத்தால் விலகினால் என்ன செய்ய முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் தவறில்லை ஆனால் அவருக்கு பேக்அப் கேப்டனாக மற்றொரு இளம் வீரரை கேப்டனாக வளர்க்க வேண்டும் என தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலில் உங்களது கேப்டனை மாற்றினால் உங்களால் வெற்றி முடிவையும் மாற்ற முடியும் என்று நான் கூற மாட்டேன். மேலும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் நீங்களும் அனைவரும் அவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு இப்போதும் லேசான காயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளது. அதனால் ஒருவேளை உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் உங்களது கேப்டன் காயத்தால் விலகினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த சமயத்தில் அவரது இடத்தில் மற்றொரு கேப்டன் தயாராக இல்லையெனில் அந்த முடிவு பெரிய சொதப்பலாகி விடும்”

Irfan-pathan

“எனவே நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த நல்ல கேப்டன். எனவே அவரை நீங்கள் கேப்டனாக நியமிக்கலாம். அதே சமயம் அவருக்கு மாற்றாக மற்றொரு வீரரையும் நீங்கள் கேப்டனாக வளர்க்க வேண்டும். அதாவது 2 கேப்டன்களை வைத்து வருங்கால அணியை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஓப்பனிங் இடத்தில் விளையாடுவதற்கு எப்படி இரண்டுக்கும் மேற்பட்ட வீரர்களை வைத்திருக்கிறோமோ அதே போல் கேப்டனாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் நமக்கு தேவைப்படுகிறது” என்று கூறினார்.

Advertisement