
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ உருவாக்கத் துவங்கியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை கழற்றி விட்ட பிசிசிஐ அவரைப் புதிய கேப்டனாக நியமித்தது. அந்த வாய்ப்பில் 754 ரன்கள் அடித்த கில் பல சாதனைகள் புரிந்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
அதனால் டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோரை கழற்றி விட்ட தேர்வாளர்கள் அவரை புதிய துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஏற்கனவே ஐசிசி ஒருநாள் தர வரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் அவர் துணைக் கேப்டனாக இருக்கிறார். எனவே ரோஹித், சூரியகுமார் ஓய்வு பெறும் போது எஞ்சிய ஃபார்மட்டிலும் கில் புதிய கேப்டனாக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் பயிற்சியாளர் மற்றும் சக இந்திய வீரர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே சுப்மன் கில்லை 3 ஃபார்மெட்டிலும் புதிய கேப்டனாக நியமிக்க முடிவெடுத்துள்ளதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தலைமைப் பொறுப்பில் தொடர்ச்சித்தன்மை அவசியம். அதற்கு 3 விதமான ஃபார்மட்டில் 3 வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதை நீங்கள் பார்க்க விரும்ப மாட்டீர்கள்”
“எடுத்துக்காட்டாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நீங்கள் 3 விதமான தொடர்களில் விளையாடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது ராகுல் டிராவிட் அல்லது ரவி சாஸ்திரி அல்லது தற்போது கௌதம் கம்பீர் பின்னணியில் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு பயிற்சியாளர் 3 வெவ்வேறு கேப்டன்களுடன் வேலை செய்வது மிகவும் கடினம்”
“எனவே இந்திய அணி தற்போது முயற்சிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அடுத்த தலைமுறையை நோக்கி நகரும் இந்த சமயத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். பேட்டிங் துறையிலும் ஸ்திரத்தன்மை தேவைப்படுவதால் சுப்மன் தலைமைப் பொறுப்பில் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்”
இதையும் படிங்க: தோனி ஒரு சக்ஸஸ்புல் கேப்டன் என்று நான் சொல்ல இதுவே காரணம் – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு
“ரசிகர்கள் மற்றும் ஊடகங்களைத் தாண்டி தொடர்வண்டியின் (அணி) எஞ்சின் யார்? என்பது பற்றிய செய்தி ஒவ்வொரு இந்திய வீரர்களிடம் தெளிவாக செல்ல வேண்டும். காலத்தால் சுப்மன் கேப்டன்ஷிப் இன்னும் முன்னேறும். இப்போதே கேப்டனாக நன்றாக செயல்படும் அவர் இன்னும் அதனுடைய கலையைக் கற்றுக் கொள்வார். அத்துடன் பேட்டிங் செய்யும் திறமையும் அவரிடம் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் அவர் ஏற்கனவே துணைக் கேப்டனாக இருக்கிறார். தற்போது டி20 துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவரை வைத்து இந்திய கிரிக்கெட் முன்னோக்கி நகர முயற்சிக்கிறது” என்று கூறினார்.