
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ புதிதாக 10 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீரர்கள் தங்களுடைய குடும்பத்துடன் பயணிக்காமல் அணியுடன் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். அனைத்து வீரர்களும் ஒன்றாக சேர்ந்து பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். போட்டி அல்லது தொடர் முன்னதாகவே முடிந்தாலும் அனைத்து வீரர்களும் ஒரே ஹோட்டலில் தங்கி ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்.
குறிப்பிட்ட எடைக்கு மேல் வீரர்கள் கொண்டு வரும் உடமைகளுக்கு அவர்களே பொறுப்பேற்று செலவு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது போன்ற 10 விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள் பெரும்பாலும் இந்திய வீரர்களை ஒன்றாக இருக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டது போல் தெளிவாக தெரிகிறது.
அதை பார்க்கும் போது இந்திய அணியில் விரிசல் என்று சமீபத்தில் வெளியான செய்திகள் உண்மை தானா? என்று ரசிகர்களை கேட்க வைக்கிறது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் அனைத்து வீரர்களும் ஒரே ஹோட்டலில் தங்க வேண்டும் என்ற விதிமுறையை பார்த்து முன்னாள் வீரர் இர்பான் பதான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்படியானால் இத்தனை நாட்களாக இந்திய வீரர்கள் அனைவரும் தனித்தனி ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த காலங்களில் வரலாற்றின் மகத்தான வீரர்கள் கூட ஒரே ஹோட்டலில் மற்ற இந்திய வீரர்களுடன் தங்கியிருப்பார்கள். இப்போதுள்ள வீரர்கள் தனித்தனி ஹோட்டலில் தங்க வைக்க எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?” என்று கூறினார்.
அதைப் பார்த்த ஒரு ரசிகர் “ஏன் மறைமுகமாக பேசுகிறீர்கள். விராட் கோலியின் பெயரை நேரடியாக சொல்லுங்கள்” என்று அவருக்கு பதிலளித்தார். அதற்கு “இல்லை நான் விராட் கோலியை பற்றி பேசவில்லை” என்று அந்த ரசிகருக்கு இர்பான் பதான் மீண்டும் பதிலளித்தார். அதாவது வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் கூட ஒரே அணியாக ஹோட்டலில் தங்கியிருந்ததாக பதான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இவ்வளவு வற்புறுத்தி தான் செய்யனுமா? ஃபார்முக்கு திரும்ப அக்கறை இருந்தா நீங்களே விளையாடுங்க.. யுவ்ராஜ் அறிவுரை
ஆனால் தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் ஒரு பக்கமும் ஜெய்ஸ்வால் போன்ற மற்றவர்கள் மறுபக்கமும் தங்கியிருப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு முதலில் பிசிசிஐ எவ்வாறு அனுமதி கொடுத்தது? என்றும் பதான் வினவியுள்ளார். அப்படி ஒன்றாக தங்கவில்லையெனில் களத்தில் மட்டும் அவர்கள் எப்படி ஒன்றாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.