இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்ற கடைசிப் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இந்தூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 124 ரன்கள் குவித்து போராடினார். அவருடன் நிதிஷ் ரெட்டி 53, ஹர்ஷித் ராணா 52 ரன்களை எடுத்து போராடினர். ஆனால் ரோஹித் சர்மா, கேப்டன் கில் உள்ளிட்ட மற்ற பேட்மேன்கள் கை கொடுக்கவில்லை. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது.
தசாப்தம் தாண்டி:
இந்நிலையில் தோனி முதல் சுப்மன் கில் வரை கடந்த 15 வருடங்களாக பல்வேறு கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ள விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக போராடியுள்ளதாக இர்பான் பதான் பாராட்டியுள்ளார். அந்த வகையில் தசாப்தம் கடந்தும் விராட் கோலி இந்திய அணியை சிறந்த பேட்ஸ்மேனாக தாங்கிப் பிடிப்பதாக அவர் பாராட்டியுள்ளார். மேலும் இவ்வளவு வருடங்கள் கடந்தும் விராட் கோலியின் ஃபிட்னஸ் மற்றும் ரன்கள் குவிப்பதற்கான பசி இன்னும் மாறவில்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த வீரர் என்பதைக் காண்பித்துள்ளார். 2013இல் இந்திய அணிக்காக நானும் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது இந்திய அணியில் இருப்பதிலேயே விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று மக்கள் சொன்னார்கள். 2016ஆம் ஆண்டிலும் விராட் கோலி தான் இந்திய அணியில் சிறந்த வீரர் என்று மக்கள் சொன்னார்கள்”
தாங்கிப்பிடிக்கும் கிங்:
“தற்போது 10 வருடங்கள் கழித்து 2026ஆம் ஆண்டிலும் விராட் கோலி தான் இந்திய ஒருநாள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எம்எஸ் தோனி தலைமையிலும் தன்னுடைய தலைமையிலும் ரோஹித் சர்மா தலைமையிலும் ரன்கள் குவித்த அவர் தற்போது இளம் கேப்டன் கில் தலைமையிலும் ஸ்கோர் செய்கிறார்”
இதையும் படிங்க: திலக் வர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. டி20 உ.கோ தொடரில் விளையாடுவாரா? – விவரம் இதோ
“விராட் ரன் மெஷின் கோலியிடமிருந்து மற்றுமொரு சதம் வந்துள்ளது. விராட் கோலியின் ஃபிட்னஸ் ரன்கள் ஓடும் விதத்தில் நம்மால் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. சொல்லப்போனால் அவருடைய திறமை இன்னும் மெருகேறியுள்ளன. அவர் மீண்டும் மீண்டும் விளையாடி ரன்கள் குவிப்பதை தொடர்கிறார். துரதிஷ்டவசமாக இந்த சதம் தோல்வியில் முடிந்தது. ஆனால் அது அற்புதமான சதமாகும்” என்று கூறினார்.



