சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியிலிருந்து முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா(6) மற்றும் சுப்மன் கில்(29) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வந்தார்.
இதையடுத்து விராட் கோலி 11, ரஹானே 1, புஜாரா 73,வாசிங்டன் சுந்தர் 85 மற்றும் பண்ட் 91 ரன்களும் குவித்தனர். இதையடுத்து தற்போது இந்திய அணி 337 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் முன்னிலை வைத்திருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய இர்பான் பதான் “ அணியில் விளையாடும் 11 வீரர்களில் இடம்பெறாத வீரர்களின் மனநிலையை பாதுகாப்பது நிர்வாகத்தின் கடமையாகும். இந்திய நிர்வாகம் அதை சரியாக செய்கிறது என்று நம்புகிறேன்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குல்தீப் யாதவுக்கு இந்திய நிர்வாகம் ஆதரவாக இருக்கிறது என்று நம்புகிறேன். குல்தீப் யாதவ் சிறந்த ஸ்பின்னர். இவரிடம் திறமைகள் இருக்கிறது. இவரை கூடிய விரைவில் ஆடும் லெவலில் எடுக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியா டெஸ்ட் இந்திய அணியில் இடம் பெற்று ஆடும் லெவனில் இடம் பெறாததால் விமர்சனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.