இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா வித்தியாசமாக ஓடிவந்து பவுலிங் செய்யும் ஆக்சனை கொண்டுள்ளார். அதனால் ஆரம்பத்தில் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று கணிக்கப்பட்டது. ஆனால் 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இன்று ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார்.
அந்தளவுக்கு கடந்த 7 வருடங்களில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடினார். அத்தொடரில் முழுமூச்சுடன் பவுலிங் செய்த அவர் 32 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார். அதனாலேயே கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் முதுகில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் இங்கிலாந்தில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்று அறிவித்தார்.
முட்டாள் அல்ல:
துரதிஷ்டவசமாக இங்கிலாந்தில் அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. அதனால் இர்பான் பதான், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் ஒன்று முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வு பெறுங்கள் என்று சொல்லாத குறையாக பும்ராவை விமர்சித்தனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் 5 போட்டிகளில் விளையாட முடியாது என்பது தெரியாத அளவுக்கு தாம் முட்டாள் அல்ல என்று பதான் தெரிவித்துள்ளார்.
உண்மையில் 3 போட்டிகளில் விளையாடும் பும்ரா தேவைப்படும் போது 5 – 6 ஓவர்களுக்கும் அதிகமான பெரிய ஸ்பெல்லை வீசுவதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது என்றே தாம் விமர்சித்ததாக பதான் கூறியுள்ளார். ஆனால் தம்முடைய விமர்சனத்தை அனைவரும் தவறாக புரிந்து கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
பதான் விளக்கம்:
“ஜஸ்ப்ரித் பும்ராவின் அணுகுமுறையை நான் கேள்வி கேட்பதாக நிறைய மக்கள் நினைக்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. முதுகில் காயத்தை சந்தித்த பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதை செய்பவரை (பும்ரா) நான் ஏன் கேள்வி கேட்க வேண்டும்? அதை நான் செய்ய மாட்டேன். யாரும் அவ்வளவு முட்டாள் இல்லை. ஆனால் ஒருமுறை நீங்கள் களத்துக்கு சென்று விட்டால் நாட்டுக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்”
இதையும் படிங்க: மும்பை, ஆர்சிபி மிஸ் பண்ணிட்டாங்க.. அந்த திறமையுடைய ப்ரேவிஸை சிஎஸ்கே தூக்கிட்டாங்க.. ஏபிடி பேட்டி
“5 – 6 ஓவர்களை வீசினால் போதும் என்பது போன்ற நிலையை அணி நிர்வாகம் தொடர்ந்து அனுமதித்தால், நம்மால் நீண்ட காலம் வெற்றி முடிவுகளைக் காண முடியாது என்று உறுதியாக சொல்வேன். பும்ராவின் பணிச்சுமையை நாம் நிர்வாகிக்க வேண்டும். புத்துணர்ச்சியை மீட்டெடுப்பது போட்டி முடிந்த பின் நடக்கும். ஆனால் நீங்கள் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறீர்கள். அந்த 3 போட்டிகளிலும் சில ஓவர்கள் கொண்ட ஸ்பெலை மட்டுமே வீசினால் அது அணிக்கு கடினத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.



