
நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று போட்டிகளில் தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் இந்திய அணியின் ஒரே ஒரு பின்னடைவாக பார்க்கப்படுவது துவக்க வீரரான அபிஷேக் சர்மாவின் பேட்டிங் தான். ஏனெனில் இந்த தொடரில் முதல் மூன்று லீக் ஆட்டங்களிலும் விளையாடிய அவர் ரன் எதுவும் எடுக்காமல் உள்ளார். இதன் காரணமாக இன்னும் அவர் இந்த தொடரில் தனது ரன் குவிப்பை துவங்கவில்லை.
இதனால் இந்த சூப்பர் 8 சுற்றில் அவர் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அவரது பேட்டிங் ஃபார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அபிஷேக் சர்மாவிற்கு ஆதரவாக சில முன்னாள் வீரர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா தற்போது ஆப் ஸ்பின்னருக்கு எதிராக தடுமாறி வருகிறார். பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் ஆப் ஸ்பின்னர் மூலமாக ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக அசத்தப்போகும் 2 இந்திய வீரர்கள் இவர்கள்தான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
அதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் அவர் பந்தை நேராக அடிக்க பார்க்காமல் குறுக்காக அடிக்கப்போகிறார். அப்படி அடிக்க பார்த்து தான் அவர் ஆட்டமிழந்து வருகிறார். எனவே ஸ்பின்னர்கள் வரும்போது அவர் சிங்கிள் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் ரன் வர ஆரம்பிக்கும் பட்சத்தில் பவுண்டரிகளை அடிக்கலாம். அப்படி விளையாடும் போது அவரது பேட்டில் இருந்து தானாக ரன்கள் வரும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.