இந்திய கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் 155 கி.மீ வேகத்திற்கு மேல் பந்து வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்படியே 2022 சீசனில் அதிரடியான வேகத்தில் வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். அதே காரணத்தால் 2022 அயர்லாந்து டி20 தொடரில் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் அந்த வாய்ப்பில் நல்ல லைன், லென்த்தை பின்பற்றாமல் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசிய அவர் ரன்களை வாரி வழங்கினார். அதனால் அறிமுகத் தொடருடன் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கொஞ்சம் முன்னேற்றத்தை சந்தித்தார். அதன் காரணமாக மீண்டும் 2023 ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இர்பான் பதான் ஆலோசனை:
அதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் 2023 ஐபிஎல் தொடரில் ரன்களை வாரி வழங்கியதால் அவரை தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டுள்ளது. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் தாம் விரைவில் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பேன் என்ற உம்ரான் மாலிக் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்துவதற்கு கொஞ்சம் வேகத்தை குறைத்து நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி பந்து வீசுங்கள் என உம்ரான் மாலிக்கிற்கு பலரும் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் வேகத்தை குறைத்து விடாதீர்கள் என்று அவருக்கு முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஏனெனில் வேகத்தை குறைத்ததால் முனாப் படேல் போன்ற நிறைய தரமான பவுலர்கள் சோடை போனதாக தெரிவிக்கும் இர்பான் பதான் இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “முதலில் அவர் தன்னுடைய வேகத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அதுவே மிகவும் முக்கியமான விஷயம். அவர் புதிய பந்தில் வலைப்பயிற்சியில் அதிகம் பந்து வீச வேண்டும்”
இதையும் படிங்க: பாண்டிங் மைண்ட் கேம்ஸ் இந்தியாவுக்கு தெரியும்.. அவங்க இல்லனா தான் 5 – 0ன்னு தோற்பாங்க.. பசித் அலி
“அது நல்ல கட்டுப்பாட்டை கொடுக்கும். தொடர்ந்து புதிய பந்தில் வீசினால் சரியான லென்த் பற்றிய ஐடியா அவருக்கு கிடைக்கும். அத்துடன் நல்ல மணிக்கட்டு நிலையில் ஸ்விங் வரும் என்பதையும் அவர் புரிந்து கொள்வார். அதுவே அவருடைய முதன்மை கவனமாக இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து அவர் தன்னுடைய யார்க்கர் பந்துகளிலும் வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.