டி20 உ.கோ’யில் மெகா அதிர்ச்சி, அதிரடி இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்த கத்துக்குட்டி வரலாறு படைத்தது எப்படி?

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அனல் பறந்து வரும் சூப்பர் 12 சுற்றில் அக்டோபர் 26 ஆம் தேதியன்று நடைபெற்ற 20வது லீக் போட்டியில் வலுவான இங்கிலாந்தை அயர்லாந்து எதிர்கொண்டது. உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு நம்பிக்கை நட்சத்திரம் பால் ஸ்டெர்லிங் ஆரம்பத்திலேயே 14 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதற்காக அசராத கேப்டன் ஆண்டி பால்பரின் அடுத்து களமிறங்கிய டுக்கர் உடன் இணைந்து 12 ஓவர்கள் வரை இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் டுக்கர் 34 (27) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஹேரி டெக்டர் டக் அவுட்டாகி ஏமாற்றினானார். இருப்பினும் மறுபுறம் வெளுத்து வாங்கிய கேப்டன் பால்பிரின் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 62 (47) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து அடுத்து வந்த குர்ட்டிஸ் காம்பேர் 18 (11) ஜார்ஜ் டாக்ரெல் 0 (1) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் அவுட்டாக்கியது.

- Advertisement -

அபார வெற்றி:
அதனால் 103/1 என்ற அற்புதமான நிலையிலிருந்த அயர்லாந்து பினிஷிங் செய்ய முடியாமல் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு சுருண்டது. அந்த அளவுக்கு டெத் ஓவர்களில் அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய இங்கிலாந்தை துல்லியமாக பந்து வீசிய அயர்லாந்து ஆரம்பம் முதலே மடக்கிப் பிடித்தது.

குறிப்பாக முதல் ஓவரிலேயே முதுகெலும்பான கேப்டன் ஜோஸ் பட்லரை டக் அவுட் செய்து மிரட்டிய அயர்லாந்து மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை 7 (5) ரன்களில் காலி செய்து நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸை 6 (8) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கியது. அதனால் 29/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு இளம் வீரர் ஹரி ப்ரூக் 18 (21) ரன்களில் போராடி அவுட்டானதை போலவே மற்றொரு வீரர் டேவிட் மாலனும் போராடி 35 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் 86/5 என தடுமாறிய தனது அணியை அடுத்ததாக களமிறங்கி 3 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்ட மொயீன் அலி 24* (12) ரன்கள் குவித்து காப்பாற்ற போராடிய போது ஜோராக வந்த மழை கொட்டி தீர்த்தது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட போட்டி நேரமும் முடிவுக்கு வந்ததாலும் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 10 ஓவரை தாண்டிய காரணத்தாலும் டக்வொர்த் லீவிஸ் முறையை நடுவர்கள் கடைபிடித்தனர்.

அப்போது 14.3 ஓவரில் 105/5 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அயர்லாந்தை விட 5 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது. அதன் காரணமாக 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அறிவிக்கப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தது இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. அயர்லாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜோஸ்வா லிட்டில் 2 விக்கெட்டுகளை எடுக்க 62 ரன்கள் எடுத்த கேப்டன் பால்பரின் ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் களத்தில் மொயின் அலி மற்றும் லியம் லிவிங்ஸ்டன் அதுபோக அடுத்ததாக சாம் கரண் என 3 அதிரடி வீரர்கள் இருந்ததால் 33 பந்துகளில் தேவைப்பட்ட 53 ரன்களை அந்த அணியால் எடுத்திருக்க முடியும் என்றே கூறலாம்.

ஆனால் அதை எடுக்க முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய அயர்லாந்து கத்துக்குட்டி போல் செயல்படாமல் இந்த வெற்றிக்கு தகுதியான அணியாக அற்புதமாக செயல்பட்டது. அதை விட டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் இவ்விரு அணிகள் முதல் முறையாக மோதிய போட்டியை மொத்தமாக தடுத்த மழை இம்முறை அயர்லாந்தின் வரலாற்று வெற்றிக்கு வழி விட்டுள்ளது.

மறுபுறம் 180 – 200 ரன்களை எடுக்க வேண்டிய அயர்லாந்தை பந்து வீச்சில் கட்டுப்படுத்திய இங்கிலாந்து பேட்டிங்கில் ஆரம்பத்தில் சொதப்பியது இந்த வரலாற்று தோல்வியை பரிசளித்துள்ளது. முன்னதாக வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே தோற்று வெளியேறிய இந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக கருதப்படும் இங்கிலாந்தை 2011 உலகக்கோப்பையில் பெங்களூருவில் தோற்கடித்தது போலவே மீண்டும் தோற்கடித்துள்ள கத்துக்குட்டி அயர்லாந்து ரசிகர்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை கொடுத்துள்ளது.

Advertisement