ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 3நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் பிசிசிஐக்கும் மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர்நீதிமன்றம்.ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கப்படவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டாண்டு தடைக்கு பின்னர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடப்போகும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
ஒவ்வொரு ஐபிஎல்-இன் போதும் பலகோடிகள் சூதாட்டத்தில் புரளுவதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஐபிஎல் போட்டிகளை தடைசெய்து உத்தரவிட வேண்டுமென்றும் ஐபிஎல் சூதாட்டக்காரர்களிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு பின்னர் இல்லையென்று நிரூபித்த ஐபிஎஸ் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சூதாட்டங்களை தடை செய்யாமல் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும் கடந்த 2013ம் ஆண்டு நடந்த சூதாட்டம் தொடர்பான புகாரில் அணிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சூதாட்டக்காரர்கள் தப்பித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பத்குமார் ஐபிஎஸ் அளித்த புகார் குறித்து பதிலளிக்கும் படி பி.சி.சி.ஐ. மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் நீதிபதிகள் வருத்தத்துடன் நம் நாட்டில் பல சட்டங்கள் இருந்தாலும், எல்லா மாநிலங்களிலும் ஊழல் மற்றும் இலஞ்சம் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்று சராமாரியாக கேள்வி கேட்ட நீதியரசர்கள், இந்தியாவில் பல்வேறு சட்டங்களும் பலவகையான குற்றவாளிகளும் இருப்பதாக கூறினர்.