
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வங்கதேச வீரர் முஸ்தஃபீசுர் ரஹ்மான் 9.20 கோடிகளுக்கு வாங்கப்பட்டிருந்தார். இருப்பினும் பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் அவரை கொல்கத்தா அணி நேற்று முன்தினம் விடுவித்தது. அதாவது வங்கதேசத்தில் சில இந்து மக்கள் மீது அந்நாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த தாக்குதலில் சிலர் இயற்கை எய்தினார்கள் என்பதும் தெரிய வருகிறது. எனவே அதற்கு இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வங்கதேசத்தை சேர்ந்த ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்று ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை ஐபிஎல் தொடருக்கு முன்பே அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.
அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட கொல்கத்தா நிர்வாகமும் ரஹ்மானை தங்களது அணியிலிருந்து விடுவித்தது. அதற்கு வங்கதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன் உச்சமாக 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு ஐசிசியிடம் வங்கதேச வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் தங்கள் நாட்டு வீரர் ரஹ்மானை நீக்கியதற்கு பதிலடியாக ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது பற்றி வங்கதேச வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
“வங்கதேச நட்சத்திர வீரர் திரு.முஸ்தபிஃசுர் ரகுமான் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி இந்திய வாரியத்தின் உத்தரவு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வாரியத்தின் இத்தகைய முடிவுக்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. இந்த முடிவு வங்கதேச மக்களை வருத்தமடைய வைத்து வேதனைப்படுத்துகிறது”
“இந்த சூழ்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு முறையான அதிகாரியின் ஒப்புதலுடன் பொது நலனுக்காக பிறப்பிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் இந்த அறிவிப்பு ஐபிஎல் மற்றும் பிசிசிஐக்கு லேசான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த ஆண்டு கேப்டன் யார்? என்பதை புகைப்படம் மூலமாக உறுதி செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – விவரம் இதோ
இது மட்டுமின்றி 2026 டி20 உலகக் கோப்பையில் ஐசிசி சார்பில் வங்கதேசத்தை சேர்ந்த சில அம்பயர்கள் போட்டிகளை வழி நடத்த உள்ளார்கள். ஆனால் தற்போது அவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பாமல் நிறுத்த வங்கதேச வாரியம் முடிவெடுத்துள்ளது. மொத்தத்தில் ஒரு வீரரை நீக்கிய இந்தியாவுக்கு பல வகைகளில் வங்கதேசம் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.