ஐபிஎல் 2024 : ஏலத்தை எந்த சேனலில் இலவசமாக பார்க்கலாம்.. தேதி, அணிகளின் கையிருப்பு தொகை விவரம்

IPL
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 போல் அல்லாமல் இம்முறை மினி அளவில் ஒரு நாள் மட்டும் நடைபெற உள்ள இந்த ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை விடுவித்து ஹர்டிக் பாண்டியா போன்ற தேவையான சில வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கி இறுதிக்கட்ட பட்டியலை சமர்ப்பித்துள்ளன.

இதை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா ஏரியானாவில் ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதில் உலகம் முழுவதிலிருந்து மொத்தம் 1166 வீரர்கள் தங்களுடைய பெயர்களை ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். அந்த பட்டியலில் 830 இந்திய வீரர்களும் 336 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவார்கள்.

- Advertisement -

ஐபிஎல் 2024 ஏலம்:
அதில் 212 பேர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள், 909 பேர் சர்வதேச அரங்கில் விளையாடாத வீரர்கள், 45 பேர் ஐசிசி துணை உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள். ஆனால் 10 அணிகளிலும் சேர்த்து மொத்தமாக வெறும் 77 வீரர்களுக்கான காலியிடம் உள்ளது. அதில் 30 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வாங்க முடியும்.

அந்த வகையில் வெறும் 77 இடத்திற்கு 1166 போட்டியிடுகிறார்கள் என்பது இந்த ஏலத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதாக அமையுள்ளது. அந்த வீரர்களை வாங்குவதற்கு 10 அணிகளில் அதிகபட்சமாக முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 38.15 கோடி தொகை கையிருப்பு உள்ளது. அதை தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 34 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 32.7 கோடி உள்ளது.

- Advertisement -

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 31.4 கோடிகளுடன் இந்த ஏலத்தில் களமிறங்கும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 29.1 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 28.95 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23.25 கோடி, மும்பை இந்தியன்ஸ் அணி 17.75 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14.5 கோடி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 13.15 கோடி ரூபாய்களுடன் இந்த ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்கு களமிறங்கியுள்ளது.

இதையும் படிங்க: அதுக்கான நேரம் வந்தாச்சு.. ரோஹித், விராட் கோலியிடம் தெளிவா சொல்லிடுங்க.. பிசிசிஐக்கு ஹர்பஜன் கோரிக்கை

இந்த ஏலத்தை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்களின் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம். குறிப்பாக தமிழக ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரலையாக பார்க்க முடியும். அதே போல மொபைல் போன் வாயிலாக ஜியோ சினிமா சேனலில் இந்த ஏலத்தை ரசிகர்கள் நேரடியாக கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Advertisement