ஐபிஎல் 2024 : நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு – ஆர்சிபி சவால் கொடுக்குமா? வரலாற்று புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

CSK vs RCB 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இம்முறை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அந்த போட்டி மட்டுமன்றி இந்த தொடர் முழுவதுமே தோனி தலைமையிலான சென்னைக்கு சவாலை கொடுக்கும் முக்கிய அணியாக பெங்களூரு இருக்கும் என்றால் மிகையாகாது.

ஏனெனில் சென்னை அணியிலிருந்து பட்டை தீட்டப்பட்ட வைரமாக வெளியேறிய பஃப் டு பிளேஸிஸ் அனுபவமிகுந்த கேப்டனாகஉன் அதிரடி துவக்க வீரராகவும் செயல்பட்டு வருகிறார். அவருடன் சந்தேகமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த மற்றொரு துவக்க வீரர் விராட் கோலி 2023 உலகக்கோப்பையில் அபாரமாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பது பெங்களூருக்கு பலமாகும்.

- Advertisement -

சென்னை – பெங்களூரு:
அவர்களைத் தொடர்ந்து அடித்து நொறுக்க கூடிய கிளன் மேக்ஸ்வெல் புதிதாக வாங்கப்பட்டுள்ள ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் எதிரணிகளை அச்சுறுத்தும் அளவுக்கு பேட்டிங் துறையில் வலு சேர்க்கின்றனர். அதே போல தினேஷ் கார்த்திக் இம்முறையும் ஃபினிஷராக அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் பெங்களூரு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் மகிபால் லோம்ரர், பிரபுதேசாய் போன்ற இந்திய வீரர்களும் கடந்த வருடம் ஓரளவு அசத்தினர்.

பவுலிங் துறையில் முகமது சிராஜ், சமீபத்திய டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி ஆகாஷ் தீப், இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி ஆகியோர் தரமானவர்களாக உள்ளனர். ஆனால் அவர்களைத் தவிர்த்து கடந்த வருடம் ரிங்கு சிங்கிடம் 5 சிக்ஸர்கள் கொடுத்த யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், டாம் கரண் ஆகியோர் சற்று ரன்களை வாரி வழங்குபவர்களாக இருப்பது பெங்களூருவுக்கு பின்னடைவாகும்.

- Advertisement -

அதை விட சஹால், ஹஸரங்கா போன்றவர்கள் கழற்றி விட்ட அந்த அணியில் தற்போது கரண் சர்மாவை தவிர்த்து யாரும் சுழல் பந்து வீச்சு துறையை பலப்படுத்துபவர்களாக இல்லை. மேலும் விஜய்குமார், வில் ஜேக்ஸ் தவிர்த்து ஸ்வப்னில் சிங், சௌரவ் சௌஹான், மயங் டங்கர், அனுஜ் ராவத் போன்ற பேக்-அப் வீரர்களும் அந்தளவுக்கு பெங்களூருவிடம் தரமாக இல்லை.

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயமடைந்த டேவோன் கான்வே இடத்தை 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி உலக சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா நிரப்புவதற்கு தகுதியானவராக உள்ளார். அவருடன் கடந்த வருடங்களில் கோப்பையை வெல்ல உதவிய நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் மற்றொரு துவக்க வீராராக விளையாடி சென்னைக்கு பலம் சேர்ப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

அதே போல மிடில் ஆர்டரில் ரகானே, மொய்ன் அலி ஆகியோருடன் ஓய்வு பெற்ற ராயுடுவுக்கு பதிலாக 2023 கோப்பையில் அசத்திய டார்ல் மிட்சேல் விளையாடுவதற்கு தயாராக உள்ளார். லோயர் மிடில் ஆர்டரில் கடந்த வருடம் சிக்சர்களை தெறிக்க விட்ட சிவம் துபே, நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் ஃபினிஷர்களாக எதிரணிகளை பந்தாட காத்திருக்கின்றனர்.

அத்துடன் மிட்சேல் சான்ட்னர், சர்துள் தாக்கூர், தீபக் சஹார், முஸ்தஃபீசர் ரகுமான், குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா, மஹீஸ் தீக்சனா ஆகியோர் பவுலிங் துறையை வலு சேர்க்கின்றனர். இதில் டார்ல் மிட்சேல், சிவம் துபே ஆகியோர் பவுலிங் துறையிலும் மொய்ன் அலி, மிட்சேல் சான்ட்னர், தாக்கூர், தீபக் சஹர் ஆகியோர் பேட்டிங் துறையிலும் கணிசமாக அசத்தக்கூடியவர்கள் என்பது சென்னைக்கு மிகப்பெரிய பாலமாகும்.

- Advertisement -

இது போக முகேஷ், சௌத்ரி துஷார் தேஷ்பாண்டே, சமர் ரிஸ்வி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் போன்ற பேக்-அப் இளம் வீரர்களும் ஓரளவு நல்ல தரத்தை கொண்டுள்ளனர். எனவே சாதாரண வீரர்களையே அசத்தலாக வழிநடத்தக் கூடிய தோனி இந்த தரமான வீரர்களை வைத்து பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னைக்கு 6வது கோப்பையை வென்று கொடுப்பதற்கு தேவையான மிகப்பெரிய அனுபவத்தை பெற்றுள்ளதை உலகமே அறியும்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் ஏலத்தில் இந்த 4 இந்திய வீரர்கள் கலந்துகொண்டால் 100 கோடிக்கு மேல் போவார்கள் – ராபின் உத்தப்பா

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் இதுவரை 30 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 20 போட்டிகளில் வென்று சென்னை வலுவாக இருக்கிறது. பெங்களூரு 10 போட்டிகளில் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

Advertisement