ஐபிஎல் 2023 வீரர்கள் ஏலம் எப்போது? வெளியான தேதி, இடம் – புதிய ரூல்ஸ் இதோ

IPL
Advertisement

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் – மே மாதம் வரை இந்தியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இம்முறை குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால் மொத்தம் 10 அணிகள் 74 போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. அதில் வெற்றிகரமான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை மற்றும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

அதே சமயம் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆரம்பம் முதலே சொல்லி அடித்த புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் வருடத்திலேயே அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்படி அனல் பறக்க எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலையை பிசிசிஐ ஏற்கனவே துவங்கியுள்ளது. குறிப்பாக 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு ஏலத்தை சமீபத்தில் நடத்திய பிசிசிஐ 48,390 கோடிகள் என்ற பிரமாண்ட தொகைக்கு விற்றது.

- Advertisement -

ஏல தேதி, இடம்:

அதை விட 2024 முதல் 84, 94 போட்டிகளாக ஐபிஎல் தொடரை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஐசிசியின் சர்வதேச கிரிக்கெட் காலண்டரில் (எஃப்டிபி) தேவையான மாற்றங்களையும் பிசிசிஐ செய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வருடம் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டதால் அனைத்து அணிகளும் மொத்தமாக கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

IPL 2022

அதன் காரணமாக இம்முறை சிறிய அளவில் மட்டுமே நடைபெறும் ஏலம் அதாவது மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே 10 அணிகளிடம் மீதமிருக்கும் ஏலத் தொகையுடன் இந்த ஏலத்தில் கூடுதலாக 5 கோடிகளை பயன்படுத்தி வீரர்களை வாங்க அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. எடுத்துக்காட்டாக இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஏலத்தின் முடிவில் பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக 3.45 கோடிகள் மீதம் கையிருப்பு உள்ளது.

- Advertisement -

எனவே அந்த அணி இம்முறை இந்த ஏலத்தில் 8.45 கோடிகளுடன் வீரர்களை வாங்க களமிறங்கலாம். அதே போல் 2.95 கோடிகளை கையிருப்பு வைத்துள்ள சென்னை 7.95 கோடிகளுடன் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் 1.55 கோடிகளை வைத்துள்ள பெங்களூரு 6.55 கோடிகளுடனும் 0.95 கோடிகளை வைத்துள்ள ராஜஸ்தான் 5.95 கோடிகளுடனும் 0.45 கோடிகளை வைத்துள்ள கொல்கத்தா 5.45 கோடிகளுடனும் 0.15 கோடிகளை வைத்துள்ள குஜராத் 5.15 கோடிகளுடனும் தலா 0.10 கோடிகளை மட்டுமே வைத்துள்ள மும்பை, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 5.10 கோடிகளுடனும் பங்கேற்கலாம்.

IPL-bcci

அது போக இந்த ஏலத்துக்கு முன்பாக டிரேடிங் விண்டோ அதாவது ஒப்பந்த அடிப்படையில் தேவையான குறிப்பிட்ட சில வீரர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் தங்களுக்கிடையே மாற்றிக் கொள்வதற்கான அனுமதியையும் பிசிசிஐ கொடுத்துள்ளது. அந்த மாற்றங்களை செய்த பின் இறுதி கட்டமாக தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐபிஎல் அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மினி ஏலம் என்றாலே குறைவான வீரர்களை மட்டுமே அணியிலிருந்து விடுவிக்கவும் வாங்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement