வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவின் தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
முன்னதாக இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக பவர்பிளே, மிடில், டெத் ஆகிய அனைத்து வகையான ஓவர்களிலும் அசத்தும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்து வருகிறார். அவருக்கு நிகராக இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் இந்தியாவுக்கு கை கொடுத்து வருகிறார்.
இன்சமாம் விமர்சனம்:
குறிப்பாக இதுவரை 15* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரராக சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் புதிய பந்தில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஸ்விங் கிடைப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார். ஆனால் பந்து நன்றாக தேய்ந்த பின்பும் ஆஸ்திரேலிய போட்டியில் 13வது ஓவரில் அவருக்கு எப்படி ஸ்விங் கிடைத்தது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே அவர் பந்தை சேதப்படுத்துகிறாரா என்பதை நடுவர்கள் அடிக்கடி சோதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பாகிஸ்தானி டிவி எனும் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அர்ஷ்தீப் சிங் 16வது ஓவரை வீசும் போது கூட அவருக்கு ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கிறது. ஆனால் புதிய பந்தில் சீக்கிரமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகுமா? அதாவது 12வது அல்லது 13 வது ஓவரில் அவர் வீசும் போது பந்து ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு தயாராக இருக்கிறது”
“எனவே அவர் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க நடுவர்கள் தங்களை இது தங்களை திறந்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பாகிஸ்தான் பவுலர்கள் இதை செய்தால் பெரிய பிரச்சனை ஏற்படும். ரிவர்ஸ் ஸ்விங் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அர்ஷ்தீப் 15வது ஓவரில் பந்தை ரிவர்ஸ் செய்தால் இதற்கு முன்பாக எதுவோ சீரியஸாக நடந்துள்ளது”
இதையும் படிங்க: அந்த மேட்ச் மாதிரி இம்முறையும் இந்தியாவை அடிச்சு நொறுக்கி இங்கிலாந்து ஜெய்க்கும்.. நாசர் ஹுசைன் எச்சரிக்கை
“தன்னுடைய ஆக்சன் காரணமாக பும்ரா அதை செய்யலாம். மேலும் சில பவுலர்கள் நன்றாக தயாராகி ஆக்சன், வேகம் ஆகியவற்றை கச்சிதமாக செயல்படுத்தும் போது அதை பெறுவார்கள். ஆனால் இது போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்” என்று கூறினார். அதாவது அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் பெறுவதற்காக ஏதோ ஏமாற்று வேலை செய்வதாக அவர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



