ஆஸி அணி உச்சத்தில் இருந்த போது கூட அவங்களால முடியல. ஆனா இப்போ இந்தியா பண்ணிட்டாங்க – இன்ஜமாம் பேட்டி

Inzamam

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா என முன்னனி வீரர்கள் அடங்கிய இந்திய டெஸ்ட் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு செல்லவிருக்கிறது. 25 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் அணி, இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் வரை சுற்றுப் பயணம் மேற்கோள்ளவிருக்கும் நிலையில், இடையில் இருக்கும் ஜூலை மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது பிசிசிஐ. இந்த தொடரில் இங்கிலாந்து செல்லவிருக்கும் வீரர்களை தவிர்த்து, இந்தியாவில் இருக்கும் மற்ற இளம் வீரர்களை கொண்ட மற்றொரு இந்திய அணியை தேர்வு செய்ய இருக்கிறது இந்திய தேர்வுக் குழு.

IND

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச அணிகளை உருவாக்கும் அளவிற்கு இந்தியாவில் திறமை வாய்ந்த வீரர்கள் இருப்பதை கண்டு, கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகளே அதிசயமாக பார்த்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டை பாராட்டி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த செயல்பாடு மிகவும் அற்புதமாக இருக்கிறது. இதேபோன்ற முடிவை, 1990களில் தொடங்கி 2010 வரை கிரிக்கெட்டில் கோலோச்சியிருந்த ஆஸ்திரேலியா அணியும் செயல்படுத்த முயற்சித்தது. என்னதான் ஆஸ்திரேலியா ஒரு ஜாம்பவான் அணியாக இருந்தாலும், அப்போது அந்த அணியால் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியால் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல்போன இந்த விஷயத்தை தற்போது இந்திய அணி செய்து காட்டியிருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியில், சர்வதேச போட்டிகளில் விளையாட எத்தனை திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று மற்ற நாடுகளுக்கும் தெரிய வந்திருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். 2005-2010ஆம் ஆண்டுகளின் இடைவெளியில் ஆஸ்திரேலியா A மற்றும் ஆஸ்திரேலியா B என இரண்டு சர்வதேச அணிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா, இறுதியில் அது சரிபட்டுவராது என்று எண்ணி அத்திட்டத்தை கைவிட்டது.

அந்த பேட்டியில் மேலும் பேசிய இன்சமாம், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் இருந்தாலும், அதற்கிடையில் இலங்கை செல்ல இருக்கும் இந்திய அணியில் இடம்பிடிக்கபோகும் வீரர்களை பார்த்தோமானால், அந்த இந்திய அணியும் நிச்சயமாக பலம் வாய்ந்த அணியாகவே இருக்கும். இந்திய நாட்டில் உள்ளூர் போட்டிகளை மிகச் சிறப்பாக கட்டமைத்ததும், ஐபிஎல் தொடரை நடத்தும் முடிவை எடுத்ததும் தான் இரண்டு இந்திய சர்வதேச அணிகளை இந்தியா உருவாக்க உதவியாக இருந்தது என்றே கூறலாம். இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடுகளால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு திறமைவாய்ந்த 50க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் தற்போது அந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

IND

இரண்டு சர்வதேச அணிகளை இந்தியா உருவாக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவே கனடாவில் 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் , முஹம்மது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றிருந்த்து. அதே சமயம் அஜய் ஜடேஜா தலமையிலான மற்றொரு இந்திய அணி காமன்வெல்த் தொடரில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement