இந்திய அணி பெற்ற வெற்றியினால் ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவிக்க அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 365 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

indvseng

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் துவங்கும்போது முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை அபாரமாக வீழ்த்தியது. இதன் காரணமாக அவர்கள் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது இந்திய அணி தொடரை ஜெயித்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்த 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

மேலும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட்டையும் அபாரமாக கைப்பற்றிய இந்திய அணி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடுவதை உறுதி செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி ஜூன் மாதம் 22 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

INDvsNZ

இந்நிலையில் தற்போது இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடினால் ஆசிய கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவதில் ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஜூன் மாதம் 22ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும் அதே நேரத்தில்தான் ஆசிய கோப்பை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி அந்த இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று உள்ளதால் இங்கு ஆசிய கோப்பை போட்டிகளின் அட்டவணையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த தேதிகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

INDvsNZ

இதனால் தற்போது ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அட்டவணையில் சில மாற்றங்கள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறை ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.