ரசிகர்கள் எதிர்பார்த்தும் காத்துக் கொண்டிருக்கும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் இரண்டாம் தேதி துவங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர். அங்கு ஜூன் ஒன்றாம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.
அதற்காக போட்டி நடைபெறும் நியூயார்க் நகரில் இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோவை பிசிசிஐ தங்களுடைய சமூகவலை தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக இந்திய அணியில் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளனர்.
கடினமான பயிற்சி:
ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராக விளையாடிய பாண்டியா மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். குறிப்பாக இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் பந்து வீச்சில் 14 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 10.75 என்ற மோசமான எக்கனாமியில் எடுத்தார். அதே போல சிஎஸ்கே அணியில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய சிவம் துபேவுக்கு பெரும்பாலும் பந்து வீசும் வாய்ப்பை கேப்டன் ருதுராஜ் கொடுக்கவில்லை.
சொல்லப்போனால் மொத்த ஐபிஎல் 2024 தொடரிலும் அவர் வெறும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்தார். அந்த சூழ்நிலையில் உலகக் கோப்பை இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா நம்பி அவருக்கு பந்து வீசுவதற்கான வாய்ப்பை கொடுக்க தயாராக இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இன்று நடைபெற்ற பயிற்சியில் சிவம் துபேவை பவுலிங் பயிற்சியை எடுக்குமாறு கேப்டன் ரோஹித் சர்மா கேட்டுக்கொண்டார்.
மேலும் அங்குள்ள சூழ்நிலைகளில் பேட்ஸ்மேன்கள் எந்த மாதிரியான லென்த்தில் அடிப்பார்கள் என்பதை பற்றிய ஆலோசனையையும் அவர் சிவம் துபேவுக்கு கொடுத்தார். மறுபுறம் சுமாரான ஃபார்மில் இருக்கும் பாண்டியா பேட்டிங்கை விட அதிகமாக பந்து வீசி பயிற்சிகளை எடுத்தார். அந்த வகையில் இந்திய அணியின் 2 வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் பந்து வீச்சுத் துறையில் முன்னேறுவதற்காக கடினமான பயிற்சிகளை செய்தனர்.
இதையும் படிங்க: ஐபிஎல்’ல சொதப்பிட்டாருன்னு வருத்தப்படாதீங்க.. அவர் டி20 உ.கோ இந்தியா ஜெய்க்க துருப்புச்சீட்டா இருப்பாரு.. ரெய்னா உறுதி
அதே போல குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் பெரும்பாலான இந்திய வீரர்கள் ராகுல் டிராவிட் மேற்பார்வையில் பயிற்சிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஒரு ரன் கூட டி20 கிரிக்கெட்டில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் அனைவரும் அறிவோம். எனவே பும்ரா, சஹால் போன்ற பவுலர்கள் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.