இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

ind
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே, இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து ஆடுகளத்தில் திணறுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர். அவர்கள் கூறியது போலவே இந்த போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை மிகப் பெரிய சரிவை சந்தித்தது. இதனையடுத்து நிலமையை உணர்ந்து கொண்டுள்ள இந்திய அணியானது அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பெரும் மாற்றத்துடன் தான் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற உத்தேச அணியை நாங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டதில் இருந்தே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரரான சுப்மன் கில்லே இங்கிலாந்து தொடரிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடி இருக்கும் அவர், இந்த இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்சிலும் நல்ல வலுவான தொடக்கத்தை அமைத்து தந்ததால் அவரின்மேல் நம்பிக்கை வைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்றே தெரிகிறது.

கடந்த இரண்டு வருடங்களாகவே பேட்டிங்கில் சொதப்பி வரும் சேட்டேஸ்வர் புஜாராவை அணியில் இருந்து நீக்கிவிட்டு, ஒன் டவுன் ஆர்டரில் கேப்டன் விராட் கோஹ்லியே களமிறங்கவிருப்பதாக தெரிகிறது. விராட் கோஹ்லி மூன்றாவது இடத்தில் விளையாடுவதால், ரஹானே நான்காவது இடத்திலும் ரிஷப் பன்ட் ஐந்தாவது இடத்திலும் விளையாடுவார்கள். முன் வரிசை வீரர்கள் விரைவிலேயே தங்களது விக்கெட்டுகளை இழந்து விடுவதால், பந்து வீச்சாளர்களுடன் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க தவித்து வரும் ரிஷப் பன்ட்டிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

pant 2

கடந்த ஆஸ்திரேலிய தொரின்போது காயமடைந்த ஹனுமா விஹாரிக்கு அதற்கடுத்து நடந்த இங்கிலாந்து தொடரிலும், தற்போது நடைபெற்று முடிந்துள்ள இறுதிப் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. புஜாராவை நீக்கியதால் இந்திய அணியின் பின் வரிசையில் ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க சாதகமான சூழ்நிலை அமைந்துள்ளது. எனவே ஆறாவது இடத்திற்கு ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்படுவார். இங்கிலாந்து ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என்பதை இந்த இறுதிப் போட்டியின் மூலமாக இந்திய வீரர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். எனவே ஒரே ஒரு ஸ்பின் பௌலருடன்தான் களமிறங்குவார்கள் என்பதால், அஷ்வின் மட்டுமே அணியில் இடம்பிடிப்பார்.

இஷாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இளம் வீரரான முஹம்மது சிராஜ் விளையாடுவார். இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடிய திறமை அவருக்கு இருப்பதால், அவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அவருடன் சேர்த்து மேலும் மூன்று வேகப் பந்து வீச்சாளர்களை இந்திய அணியில் சேர்க்கலாம் என்பதால், அந்த இடங்களுக்கு முஹம்மது ஷமி, ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள். ஷர்துல் தாக்கூரை அணிக்குள் சேர்ப்பதால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மேலும் வலுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thakur

இங்கிலாந்துக்கு எதிரான உத்தேச இந்திய அணி:

01. ரோஹித் சர்மா 02. சுப்மன் கில் 03. விராட் கோஹ்லி 04. ரஹானே 05. ரிஷப் பன்ட் 06. ஹனுமா விஹாரி 07. ரவிச்சந்திரன் அஷ்வின் 08. ஷர்துல் தாக்கூர் 09. முஹம்மது ஷமி 10. ஜாஸ்பிரித் பும்ரா 11. முஹம்மது சிராஜ்.

Advertisement