ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு நடைபெற்ற டி20 தொடரையும் 4 – 1 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடருக்குப்பின் சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் டி20 உலகக் கோப்பை வென்று ஓய்வு பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா 5 இடங்கள் சரிந்து 42வது இடத்தை பிடித்துள்ளார். அதே போல ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி 8 இடங்கள் சரிந்து 51வது இடத்தை பிடித்துள்ளார். ஓய்வு காரணமாக விளையாட மாட்டார்கள் என்பதால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் டாப் 100 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
புதிய தரவரிசை:
கடந்த 10 வருடங்களாக மேலே இருந்த அவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவது ரசிகர்களுக்கு ஆதங்கத்தை கொடுப்பதாக இருக்கிறது. அதே சமயம் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாகவும் பேட்மேனாகவும் அசத்திய சுப்மன் கில் 36 இடங்கள் முன்னேறி 37வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
அதே போல மற்றொரு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்து 8வது இடத்தில் இருக்கிறார். மேலும் ஜிம்பாப்வே தொடரில் அதிரடியாக விளையாடிய அசத்திய ஜெய்ஸ்வால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர்கள் அனைவருக்கும் மேலே நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 2வது இடத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார்.
இதிலிருந்து மூத்த வீரர்கள் வெளியேறினாலும் அந்த இடத்தை நிரப்பி இந்தியாவை வருங்காலத்தில் தங்கிப் பிடிக்க தரமான இளம் வீரர்கள் வந்து விட்டனர் என்றே சொல்லலாம். அத்துடன் பவுலிங் தரவரிசையில் ஜிம்பாப்வே தொடரில் விளையாடாத அக்சர் பட்டேல் 13, குல்தீப் யாதவ் 16வது இடத்திற்கு சரிந்துள்ளனர். அதே போல ஹர்திக் பாண்டியாவும் ஜிம்பாப்வே தொடரில் விளையாடவில்லை.
இதையும் படிங்க: ஆஸி மண்ணில் அறிமுகமாக வாய்ப்பிருக்கு.. அதுக்கு முன்னாடி இதை மட்டும் செய்ங்க.. பராஸ் மாம்ப்ரே அறிவுரை
அதனால் டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த அவர் தற்போது 5 இடங்கள் சரிந்து 6வது இடத்தை பிடித்துள்ளார். அக்சர் படேல் 13வது இடத்தைப் பிடித்துள்ளார். இருப்பினும் அணிகள் தர வரிசையில் தொடர்ந்து இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கிறது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்திய அணி டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



