அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 7ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. குறிப்பாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்று இம்முறை கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த போராட உள்ளது.
மறுபுறம் ஐசிசி ஃபைனல்களில் ஏற்கனவே நிறைய வெற்றிகளை பெற்று அதிக உலக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சிலேயே வென்று சமீபத்தில் தங்களது சொந்த மண்ணில் தோல்விகளை பரிசளித்த இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கியது. அந்த நிலைமையில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். குறிப்பாக லண்டன் நகரில் போட்டி துவங்கும் போது மேகமூட்டத்துடன் கூடிய ஈரப்பதமான வானிலை நிலவியதால் இந்த முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்திய வீரர்கள் ஆறுதல்:
அத்துடன் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலை இருந்த காரணத்தால் வேறு வழியின்றி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக திகழும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்ட அவர் 4வது பவுலராக ஷார்துல் தாக்கூரை தேர்வு செய்து விக்கெட் கீப்பராக பரத் விளையாடுவார் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து துவங்கிய அந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தங்களுடைய கைகளில் கருப்பு பட்டையை அணிந்து கொண்டு களமிறங்கினர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பாலசோர் எனும் ஊரில் இருக்கும் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக மோதியது. அதனால் ஏற்பட்ட விபத்தில் 1000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் காயத்தை சந்தித்த நிலையில் 250க்கும் மேற்பட்டவர்கள் இயற்கை எய்தியது ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முக்கிய இடத்தில் சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த மோசமான நிகழ்வு ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
அந்த மோசமான நிகழ்வுக்காக சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை ஏராளமான நட்சத்திர வீரர்களும் ரசிகர்களும் சோகத்துடன் ஆறுதல் தெரிவித்த நிலையில் இந்திய அரசு தேவையான மீட்பு பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் அந்த துயர சம்பவத்தில் பாதிப்பை சந்தித்தவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் கொடுக்கப்பட்ட நிலையில் நிறைய நல்ல மனம் கொண்டவர்கள் உதவிகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக அந்த நிகழ்வில் பாதித்தவர்களின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தம்முடைய பள்ளியில் இலவச கல்வியை கொடுக்க தயாராக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் வீரர்கள் சேவாக் அறிவித்தார். அந்த நிலையில் அந்த மோசமான விபத்தில் இயற்கை எழுதியவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த மாபெரும் ஃபைனலில் முதல் நாளில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: WTC Final : இதுக்குதான் நான் பவுலிங்கை தேர்வு செய்தேன். டாசுக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா – சொன்னது என்ன தெரியுமா?
மேலும் தங்களது நட்பு நாடாக இருக்கும் இந்தியாவில் இருந்த இந்த சோக நிகழ்வுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கினர். அத்துடன் போட்டி துவங்குவதற்கு முன்பாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இயற்கை எய்தியவர்களுக்கு சில நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தினர். அதைத்தொடர்ந்து இரு அணிகளின் தேசிய கீதமும் வாசிக்கப்பட்டு போட்டி துவங்கியது.



