
இந்திய அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 11ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. நியூசிலாந்து அணிக்காக 23 வயதாகும் ஆதித்யா அசோக் எனும் இளம் வீரர் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலூர் மாவட்டத்தில் பிறந்த ஆதித்யா அசோக் 4 வயதில் இருந்த போது அவரது குடும்பம் சிங்கப்பூருக்கு சென்றது. அங்கிருந்து சில காலம் கழித்து நியூசிலாந்துக்கு சென்ற அவருடைய குடும்பம் நிரந்தரமாக குடியேறியுள்ளது. அதனால் நியூஸிலாந்தின் குடியுரிமை பெற்ற ஆதித்யா அந்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினார்.
அங்கே சுழல் பந்து வீச்சாளராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு நியூசிலாந்து அண்டர் 19 அணிக்காக விளையாடு வாய்ப்பு கிடைத்தது. 2020 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற வீரர்களுக்கு எதிராக விளையாடிய ஆதித்யா தொடர்ந்து நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்தார். குறிப்பாக 2023 பிளன்கட் ஷீல்ட் தொடரில் ஆக்லாந்து அணிக்காக அவர் ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 78 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஆதித்யா லிஸ்ட் ஏ, உள்ளூர் டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் 2023ஆம் ஆண்டு நியூசிலாந்துக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆதித்யா இதுவரை 2 ஒருநாள், 1 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த வரிசையில் தற்போது பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு இப்போட்டியில் கிடைத்துள்ளது.
பொதுவாக நியூசிலாந்தில் வேகத்துக்கு சாதகமாக ஒரே மாதிரியான மண்ணில் ஃபிளாட்டான பிட்ச்கள் இருப்பது வழக்கமாகும். ஆனால் இந்தியாவில் செம்மண் மற்றும் கருமண் ஆகிய 2 விதமான மண்களில் பிட்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே இந்தியாவில் அசத்துவதற்காக முன்கூட்டியே சென்னைக்கு வந்த அசோக் அங்குள்ள சிஎஸ்கே அகாடமியில் பயிற்சிகளை எடுத்தார்.
இதையும் படிங்க: ராணா கூட பரவால்ல.. அவருக்கு பதில் அர்ஷ்தீப்பை ஏன் எடுக்கல.. ரசிகர்களுக்கு சேர்ந்து அஸ்வின் கேள்வி
அதனால் இந்திய அணிக்காக தற்போது அவர் முழுமையாக விளையாடத் தயாராக இருக்கிறார் என்று சொல்லலாம். இதற்கு முன் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்தரா நியூசிலாந்துக்காக அறிமுகமாகி விளையாடினார். அந்த வரிசையில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நியூசிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.