இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அணி முற்றிலும் மாற்றம் அடைந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியும் உள்ளது. இந்நிலையில் இந்த தோல்வியை பெரிதாக யோசிக்காத இந்திய அணியின் ரசிகர்கள் அணியில் இடம் பெற்று மோசமாக விளையாடிய ஒரு முன்னணி வீரரை சற்று அதிகமாகவே விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்காக ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் நல்ல பிளேயராக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் தொடர்ந்து வீணடித்து வருவதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். ஐபிஎல் தொடரின்போது சிறப்பாக செயல்பட்டு தனது திறனை வெளிக்கொணரும் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் போது சோபிக்க தவறிவிடுகிறார்.

இதுவரை 10 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 117 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிலும் இலங்கை அணிக்கு எதிராக முன்னணி வீரர்கள் இல்லாத நிலைமையில் அனுபவ வீரராக இருந்து அணியை முன்னுக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதன் காரணமாக இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் அவருக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை எல்லாம் மெத்தனமாக எண்ணி மோசமாக விளையாடுவதால் இனி அவருக்கு வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தொடரில் மற்ற இளம் வீரர்கள் மீது இல்லாத அளவிற்கு சஞ்சு சாம்சன் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



