டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா கடந்த 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த அவரை சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, வீரேந்திர சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியார் ரவி சாஸ்திரி பாராட்டியிருந்தார். அதனால் நம்பிக்கை நட்சத்திரமாக அவதிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்பட தவறியதால் அதிரடியாக நீக்கப்பட்டார்.
கடைசியாக கடந்த 2022 ஜூலை மாதம் இந்தியாவுக்காக விளையாடியிருந்த அவர் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடி உடல் எடையை குறைத்து சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக ரஞ்சி கோப்பையில் 370 ரன்கள் விளாசிய அவர் சமீபத்திய நியூசிலாந்து டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை. அந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு மும்பை விமான நிலையத்தில் அருகே இருக்கும் பிரபல 5 நட்சத்திர ஹோட்டலுக்கு தனது நண்பர் ஆசிஷ் சுரேந்திராவின் விலையுயர்ந்த உணவு அருந்துவதற்காக பிரித்வி ஷா சென்றுள்ளார்.
வினோத் காம்ப்ளி மாதிரி:
அப்போது வழக்கம் போல சில ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி மற்றும் ஆட்டோகிராப் கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஓரிரு புகைப்படங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தும் அவர்கள் தொடர்ந்து செல்பி கேட்டதால் கடுப்பான பிரிதிவி ஷா அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் மேனேஜரை வரவழைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். ஆனால் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது 8 பேர் கொண்ட அந்த குழுவினர் சாலையில் பிரித்வி ஷா வந்த காரை நிறுத்தி பேஸ் பால் கட்டையால் சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
அதனால் கோபமடைந்து வெளியே வந்த பிரித்திவி ஷா அந்த குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த குழுவினர் 50000 பணம் கொடுத்தால் மட்டுமே அங்கிருந்து செல்வதாக கட்டாயப்படுத்தியதால் உடனடியாக காவல்துறைக்கு மொபைல் போனில் பிரிதிவி ஷா புகார் கொடுத்து விட்டு அங்கிருந்து மற்றொரு காரில் சென்று விட்டார். அதை தொடர்ந்து அந்த 8 நபர்களை பிடித்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
ஆனால் அதில் முதலில் பிரிதிவி ஷா மற்றும் அவர்களது நண்பர்கள் தான் தங்களது குழுவில் இருந்த ஒரு பெண்ணிடம் உடல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர்கள் பதில் புகார் கொடுத்துள்ளனர். குறிப்பாக அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக இருக்கும் சப்னா கில் என்று தெரிய வருகிறது. மேலும் அதற்கு ஆதாரமாக இது பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் அந்த பெண்ணை பிரிதிவி ஷா கட்டையால் தாக்க முயற்சிப்பது தெரிகிறது.
அப்போது அந்தப் பெண் நீங்கள் கிரிக்கெட்டராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இவர் தான் எங்களை அடித்தார் என்று பதிலளிப்பது ஒருவேளை இவர் மீது தான் தவறு இருக்குமோ என்று ரசிகர்களையே சந்தேகிக்க வைக்கிறது. முன்னதாக கடந்த 2020 வாக்கில் இருமல் மருந்து என்ற பெயரில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக பிரிதிவி ஷா சில காலம் தடைபெற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அத்துடன் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று பிரபல மாடல் அழகியை தனது மனைவி என்று குறிப்பிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் பின்னர் அதை யாரோ எடிட்டிங் செய்தது என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பல்டி அடித்தார்.
அந்த பரபரப்பு முடிவதற்குள் அவர் தற்போது மீண்டும் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் சச்சின் போல வருவார் என்று நாம நினைத்துக் கொண்டிருக்கும் பிரிதிவி ஷா கடைசியில் திறமையிருந்தும் தவறான வழியில் சென்ற வினோத் காம்ப்ளி போல உருவாகிவிடுவாரோ என்ற அச்சத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.