உலகிலேயே வீக்னெஸ் இல்லாத ஒரே டீம் இந்தியா தான், 2023 உ.கோ’யை கனவில் ஜெயிச்சுடுவாங்க – ரசிகர்கள் வேதனை, காரணம் இதோ

India Rohit Sharma
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாப தோல்வியை சந்தித்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதியன்று பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த தாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேசத்தின் தரமான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அசத்திய கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் ஆரம்ப முதலே இந்தியாவின் நெருக்கடியால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 39.3 ஓவரில் 136/9 என தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அந்த சமயத்தில் களமிறங்கிய மெகதி ஹசன் கேஎல் ராகுல் கோட்டை விட்ட கேட்ச்சை பயன்படுத்தி 38* (39) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு அவமான தோல்வியை பரிசளித்தார். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள வங்கதேசம் கத்துக்குட்டியாக இருந்தாலும் சொந்த மண்ணில் நாங்கள் எப்போதுமே புலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

- Advertisement -

கனவில் 2023 உலககோப்பை:
மறுபுறம் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பிய இந்தியா தோல்விக்கு தகுதியான அணியாக செயல்பட்டது என்றே கூறலாம். முதலில் என்ன தான் டாக்கா மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ரோகித் சர்மா, சிகர் தவான், விராட் கோலி ஆகிய டாப் 3 பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்பட்டு சொற்ப ரன்களில் அவுட்டாகி 49/3 என்ற கொடுத்த மோசமான தொடக்கமே பேட்டிங்கில் பெரிய சரிவை ஏற்படுத்தியது.

அதை விட மிடில் ஆர்டரில் 73 ரன்கள் குவித்த ராகுலின் போராட்டத்தை வீணடிக்கும் வகையில் தீபக் சஹர் 0, சபாஸ் அஹமத் 0, ஷார்துல் தாகூர் 2 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி 200 ரன்களை கூட தொட முடியாமல் இந்தியாவின் தோல்வியை ஆரம்பத்திலே உறுதி செய்தனர். சரி பேட்டிங்கில் தவற விட்டதை பந்து வீச்சில் பிடித்து விடலாம் என்ற எண்ணத்துடன் 40 ஓவர்கள் வரை அட்டகாசமாக செயல்பட்டு 9 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர்கள் வெற்றி உறுதியான மமதையில் கடைசி 6 ஓவரில் ஹசன் – ரஹ்மான் ஆகிய டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு மோசமாக பந்து வீசி வெற்றியை தாரை வார்த்தார்கள்.

- Advertisement -

குறிப்பாக யார்கர், ஸ்லோ பந்துகள் போன்ற டெத் ஓவர்களில் வீச வேண்டிய அடிப்படை பந்துகளை கூட வீசாத இந்திய வீரர்கள் ஒய்ட், நோ-பால் போன்ற பந்துகளை வீசி ஸ்கூல் பவுலர்களை போல செயல்பட்டார்கள். இதற்கிடையில் அல்வா கேட்ச்சை ராகுல் விட்டது உட்பட முக்கிய நேரத்தில் இந்தியாவின் ஃபீல்டிங் பள்ளி குழந்தைகளை விட படுமோசமாக இருந்தது மீதமிருந்த வெற்றியையும் வெற்றிலை பாக்கு தட்டின் மேல் வைத்து வங்கதேசத்திற்கு பரிசாக கொடுக்க காரணமாக அமைந்தது.

வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் இப்படி 3 துறைகளிலும் சொதப்பியதை பார்க்கும் ரசிகர்கள் “இந்திய அணியிடம் வீக்னஸ் எதுவுமே இல்லை ஆனால் மொத்த அணியும் பலவீனமாக உள்ளது” என்று வேதனையை தெரிவிக்கிறார்கள். ஏனெனில் 2013 முதல் ஏற்கனவே ஐசிசி தொடர்களில் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வரும் இந்தியா இந்த வருடம் ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை என முக்கிய தொடர்களில் இதே போல பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என 3 துறைகளிலும் சொதப்பி தோல்வியை சந்தித்து வருகிறது.

அதனால் தரமான வீரர்கள் இருந்தும் குழப்பமான அணித் தேர்வு, காலம் கடந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, களத்தில் இது போன்ற சொதப்பலான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது போன்ற சொதப்பல்களால் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை உலகின் நம்பர் ஒன் அணியாக கருதப்படும் இந்தியா கனவில் மட்டுமே வெல்ல முடியும் என்று இந்திய ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement