பாகிஸ்தான் இந்த வாரம்னா, இந்தியா அடுத்த வாரம் வெளியே வந்துடும் – முன்னாள் பாக் வீரர் பொறாமை பேச்சுக்கு ரசிகர்கள் பதிலடி

INDvsPAK-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது. பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஜிம்பாப்வே நிர்ணயித்த 131 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 4, முஹம்மது ரிஸ்வான் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். போதாக்குறைக்கு ஏற்கனவே திண்டாடும் மிடில் ஆர்டரில் ஷான் மசூட் 44 ரன்களை எடுத்தது தவிர எஞ்சிய பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை கூட எடுக்காமல் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் ஏற்பட்ட பரபரப்பில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது. மேலும் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியிலும் ஒரு கட்டத்தில் கையில் வைத்திருந்த வெற்றியை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் கடைசி நேரத்தில் சொதப்பி கோட்டை விட்ட பாகிஸ்தானுக்கு இந்த அடுத்தடுத்த தோல்விகளால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஆரம்பத்திலேயே குறைந்துள்ளது.

- Advertisement -

முன்னாடி பின்னாடி:
அத்துடன் வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்கிய 6 டி20 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் 1 வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. அந்த வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் சுமாராக செயல்பட்டு வரும் அந்த அணி எஞ்சிய 3 போட்டிகளில் அபரிதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது கடினமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தியாவுக்கு எதிராக கடைசி பந்து வரை அனல் பறந்த போட்டியில் அடி வாங்கிய பாகிஸ்தான் அதிலிருந்து மீண்டெழ முடியாமல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதை விட மோசமான தோல்வியை சந்தித்துள்ளதால் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது.

அதனால் கடுப்பான முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தங்களுடைய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையை இழந்தது மட்டுமல்லாமல் நாங்கள் இந்த வாரம் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினால் இந்தியா அடுத்த வாரம் வெளியேறுவீர்கள் என பொறாமையுடன் பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் இந்த வாரம் வெளியே வந்துவிடும் என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன். அதே சமயம் அடுத்த வாரம் அரை இறுதியில் விளையாடிய பின் இந்தியாவும் வெளியே வந்துவிடும். ஏனெனில் எங்களைப் போலவே இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது. இந்த சமயத்தில் நான் மிகவும் எரிச்சலாக இருப்பதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது 2014 முதல் உலகக்கோப்பை லீக் சுற்றில் அசத்தும் இந்தியா தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்றுகளில் தோல்வியடைந்து வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. அதே போல் இந்த வருடமும் தங்களை தோற்கடித்தாலும் அரை இறுதி சுற்றைத் தாண்டி பைனலுக்கு சென்று கோப்பையை வெல்ல முடியாமல் முன்கூட்டியே இந்தியா வெளியேறிவிடும் என்று சோயப் அக்தர் வெளிப்படையாக பேசியுள்ளது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

அதனால் கொந்தளிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதலில் ஜிம்பாப்வே போன்ற சிறிய அணியிடம் தோல்வியடைந்த உங்கள் அணியை பற்றி கவலைப்படுங்கள் எங்களுடைய இந்தியாவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு தகுதியில்லை என்று காட்டமான பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் இது போன்ற காழ்ப்புணர்ச்சி, பொறாமை குணங்களால் தான் உலகக் கோப்பையில் காலம் காலமாக எங்களிடம் மண்ணை கவ்வி வருகிறீர்கள் என்றும் இந்திய ரசிகர்கள் சரமாரியாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement