ஒருநாள் அணியில் ராகுலுக்காக பாவப்பட்ட அவர நைசா கழற்றி விட்ட நீங்க வேற லெவல் – தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

Rishabh pant Shreyas Iyer Sanju Samson
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு 99% உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி 2 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த ஒரு வருடமாகவே மோசமான பார்மில் சுமாராக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

கடைசியாக கடந்த 2022 ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்திருந்த அவர் அதன் பின் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்ட போதிலும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக சுப்மன் கில், சர்ப்ராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு தொடர்ந்து விளையாடி வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்து வருகிறது. எனவே ரசிகர்களை அமைதிப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி 2 போட்டிகளில் கண் துடைப்புக்காக துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்தாலும் மீண்டும் விளையாடும் அணியில் ராகுலுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

- Advertisement -

நைசா கழற்றி விட்டிங்களே:
அது கூட பரவாயில்லை ஆனால் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ராகுல் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மீண்டும் கடுப்பாக வைத்துள்ளது. ஏனெனில் 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவரால் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அதனால் ஏற்பட்ட விமர்சனத்தை சமாளிப்பதற்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் துணை கேப்டன்ஷிப் மற்றும் ஓப்பனிங் இடத்தை பறித்த தேர்வுக்குழுவினர் 2023 உலக கோப்பையில் எப்படியாவது அவரை விளையாட வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் காயமடைந்த ரிசப் பண்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பில் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் வெறும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்த அவர் சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

மறுபுறம் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடி குப்பையாக பயன்படுத்தப்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஒரு வழியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஓரளவு நிலையான வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் 284 ரன்களை 71 என்ற நல்ல சராசரியில் 105 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் கடந்த அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் 3 போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக செயல்பட்டார்.

ஆனாலும் இதே ராகுலுக்காக கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்சன் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரிலும் ஒதுக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் சஞ்சு சாம்சனை விட அதிக வாய்ப்புகளைப் பெற்ற ராகுல் குறைவான ரன்களையே அடித்துள்ளார்.

- Advertisement -

அதை விட கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முக்கிய கேட்ச்சை விட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த ராகுலுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுவதே ரசிகர்களின் இந்த கோபத்திற்கு காரணமாகும். அதனால் கொதிக்கும் ரசிகர்கள் ராகுலுக்கு கிடைத்த வாய்ப்பில் கால்வாசி கிடைத்திருந்தால் கூட சஞ்சு சாம்சன் இந்நேரம் பெரிய அளவில் வந்திருப்பார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: எந்த பகையும் இல்ல அக்கறைல சொல்றேன் பார்முக்கு திரும்ப அதை செய்ய முடியுமா? ராகுலுக்கு வெங்கடேஷ் பிரசாத் கோரிக்கை

அதே போல் சூரியகுமார் யாதவ், இசான் கிசான் ஆகியோரை விட சிறந்த சராசரியை கொண்டிருந்தும் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் ஏற்கனவே சாம்சனை புறக்கணித்து 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது இறுதியில் தோல்வியை பரிசளித்தது. அதே போலவே தற்போது மீண்டும் அவரை கழற்றி விடும் இந்திய அணிக்கு 2023 உலகக் கோப்பையிலும் தோல்வி காத்திருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே இந்திய அணி நிர்வாகத்தை விளாசி வருகிறார்கள்.

Advertisement