ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஏனெனில் முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்ற அந்த அணி இந்தியாவிடம் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வென்றும் பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறியது.
அதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களுடைய சொந்த அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் ஒரு பாகிஸ்தான் ரசிகரை நட்சத்திர வீரர் ஹரிஷ் ரவூப் அடிக்கச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது நேற்று தனது மனைவியுடன் ஹோட்டல் அறைக்கு சென்று கொண்டிருந்த ஹரிஷ் ரவூஃபிடம் ஒரு பாகிஸ்தான் ரசிகர் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தேவை என்ன:
இருப்பினும் அதை அவர் மறுக்காததால் ஏமாற்றமடைந்த அந்த ரசிகர் ஏதோ சொன்னதாக தெரிகிறது. அதனால் கோபமடைந்த ஹரிஷ் ரவூப் “என்னுடைய அப்பாவை பற்றி எப்படி சொல்லலாம். நீ இந்தியராகத் தான் இருக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அந்த ரசிகரை வேகமாக அடிக்க ஓடினார். அப்போது அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கே கைகலப்பு தவிர்க்கப்பட்டது.
இறுதியில் “நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் தான். எங்களிடம் இப்படியா நடந்து கொள்வீர்கள்?” என்று அந்த ரசிகர் சொல்வதுடன் வீடியோ நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து தம்முடைய குடும்பத்தினரை பற்றி திட்டியதாலேயே அப்படி நடந்து கொண்டதாக ட்விட்டரில் ஹரிஷ் ரவூப் விளக்கம் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சாகின் அப்ரிடி, பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் ஹரிஷ் ஃரவூப்க்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதில் முகமது ரிஷ்வான் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஹரிஷ் ரவூப்பை அவ மரியாதை செய்தவர் பாகிஸ்தானா அல்லது இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது பொருத்தமற்றது. உண்மையில் முக்கியமானது என்னவென்றால் அந்த நபருக்கு மதிப்புகள் மற்றும் பழக்க வழக்கங்கள் இல்லை. எந்த ஒரு மனிதனையும் குறிப்பாக அவரது குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் அவமரியாதை யாருக்கும் உரிமையில்லை”
இதையும் படிங்க: தொட்டதெல்லாம் தங்கமாகும் கம்பீருடன் அந்த இந்திய ஜாம்பவானை பவுலிங் பயிற்சியாளரா போடுங்க.. கம்ரான் அக்மல்
“இத்தகைய நடத்தை நிறுத்தப்பட வேண்டும். சகிப்புத்தன்மை, மரியாதை, இரக்கம் போன்றவை தற்போது அரிதான பொருட்களாகி விட்டது” என்று கூறினார். அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அந்த ரசிகரே தாம் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று வீடியோவில் தெளிவாக சொன்ன நிலையில் “இந்தியர்” என்று குறிப்பிட்டு விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமையும் தேவையும் இருக்கிறது? என்று முகமது ரிஸ்வானை விளாசி வருகின்றனர்.



