ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணி என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது இந்த சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பையில் இதுவரை பாகிஸ்தான் அணியிடம் தோற்றதே இல்லை என்ற மிகப்பெரிய வரலாற்றையும் இந்திய அணி அந்த போட்டியின் போது முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்திய அணியின் இந்த தோல்வி தற்போது பெரிய விவாதங்களை எழுப்பி உள்ளது. ஏனெனில் தொடர் தொடங்கும் முன்னர் பயிற்சி ஆட்டம் வரை இந்திய அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடி வந்ததால் நிச்சயம் இந்த டி20 தொடரில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று பலரும் கூறி இருந்தனர்.
ஆனால் முதல் போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் இந்த இந்திய அணியில் இருந்து ஹார்டிக் பாண்டியா நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. ஏனெனில் காயம் காரணமாக சமீப காலமாகவே பந்து வீசாமல் தவித்து வரும் பாண்டியா பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தனது அதிரடியை வெளிக்காட்டவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் பேட்டிங் செய்யும்போது சிரமத்தை சந்தித்த பாண்டியா மீண்டும் காயமடைந்து பெவிலியன் திரும்பினார். இப்படி உடற்தகுதி இன்றி தவித்து வரும் அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கொடுக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ராகுலின் நோபால் விக்கெட் சர்ச்சைக்கு கிடைத்த முடிவு. உண்மையில் நடந்தது இதுதானாம் – அடப்பாவமே
ஏனெனில் தற்போது நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட பந்துவீச்சாளர்கள் கைப்பற்ற முடியாமல் திணறினர். அதேவேளையில் மிடில் ஓவர்களில் ஐபிஎல் தொடரின்போது சென்னை அணிக்காக கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்த ஷர்துல் தாகூர் அணியில் இருந்தால் நிச்சயம் அது பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி கைகொடுக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதன் காரணமாக தற்போது பாண்டியாவிற்கு எதிராகவும், தாகூருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.



