இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 191 ரன்களுக்கு சுருண்டது.

இந்த போட்டியில் விளையாடிய முன்னணி வீரர்கள் பலரும் சொதப்பிய நிலையில் துணை கேப்டன் ரஹானே மீது பெரிய அளவு விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த ரஹானே மற்றபடி இந்த தொடரில் பெரிய அளவு ரன்களை குவிக்கவில்லை. மொத்தம் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரிய அளவில் எழுந்துள்ளன. மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற கருத்துகளும் எழுந்து வருகின்றன.

ரகானே கடந்த பல போட்டிகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் குவிக்க தடுமாறுகிறார் இதன் காரணமாக அவரது கரியர் முடிவுக்கு வர உள்ளது என்றும் அதற்கு முன்னதாக அவராகவே ரிட்டயர்ட் ஆகிவிடலாம் என்ற கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. ஏற்கனவே துணை கேப்டன் என்ற பதவி இருப்பதனால் தான் ரகானேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அப்படி இல்லை என்றால் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பார் என்றும் சில பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறியிருந்தனர்.

இந்திய டெஸ்ட் அணியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான ரஹானே இதுவரை 77 போட்டிகளில் விளையாடி 4742 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



