ஆசிய கோப்பை பைனலில் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்ட அவமானம் – கொதிக்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

IND Fans SL vs PAK
Advertisement

வரலாற்றில் 15ஆவது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 20 ஓவர்களில் 170/6 ரன்கள் சேர்த்தது. நிஷாங்கா, சனாக்கா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 58/5 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணியை அதிரடியாக விளையாடி காப்பாற்றிய ஹசரங்கா 36 (21) ரன்களும் கடைசி வரை அவுட்டாகாமல் பினிஷிங் கொடுத்த ராஜபக்சா 71* (45) ரன்களும் குவித்தனர்.

அதை தொடர்ந்து 171 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 22/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்து 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய இப்திகார் அகமது 32 (31) ரன்களிலும் அவருடன் மெதுவாக பேட்டிங் செய்த உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் 55 (49) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இலங்கைக்கு பாராட்டு:
ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் போராடாமல் இலங்கையின் தரமான பந்துவீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும் ஹசரங்கா 3 விக்கெட்டும் எடுத்தனர். அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2022 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதிலும் சமீப காலங்களில் கத்துக்குட்டி என்றழைக்கப்படும் அளவுக்கு சுமாராக செயல்பட்டு தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் அந்த அணி இளம் வீரர்களை வைத்து தங்களை விட வலுவான பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.

மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் சொதப்பிய பாகிஸ்தான் வெறுங்கையுடன் நாடு திரும்பியது. முன்னதாக இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெறும் கையுடன் வெளியேறியது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் இதர அணிகளை காட்டிலும் வலுவாகவும் உலகின் நம்பர்-1 டி20 அணியாக இருந்தும் தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடிகளால் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

- Advertisement -

அவமதிப்பட்ட ரசிகர்கள்:
இருப்பினும் தங்களையே தோற்கடித்து சிறப்பாக விளையாடிய இலங்கையும் பாகிஸ்தானும் பைனலில் எப்படி விளையாடப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆர்வம் கொண்ட இந்திய ரசிகர்கள் நேற்றைய போட்டி நடைபெற்ற துபாய் மைதானத்திற்கு சென்றார்கள். ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதிய இப்போட்டியில் இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு சென்ற இந்திய ரசிகர்களை மைதான காவலர்கள் உள்ளே விடாமல் நுழைவு வாயிலேயே தடுத்து வெளியே அனுப்பியதாக இந்திய ரசிகர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கமான பாரத் ஆர்மி குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து கொண்டு சென்ற ரசிகர்களுக்கு மட்டுமே மைதான காவலர்கள் அனுமதி வழங்கியதாகவும் இந்திய ரசிகர்கள் வீடியோ ஆதாரத்துடன் பதிவிட்டு குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இப்போட்டியை பார்ப்பதற்காக சில ரசிகர்கள் இந்தியாவில் இருந்து பணத்தை செலவழித்து வந்திருந்த நிலையில் மைதான காவலர்களின் இந்த செயல் வேதனை அளிப்பதாகவும் அவர்கள் சோகத்துடன் கூறியுள்ளனர்.

மேலும் உள்ளே போக வேண்டுமானால் பாகிஸ்தான் அல்லது இலங்கை ஜெர்ஸியை அணிந்து வருமாறு காவலர்கள் கூறியதாகவும் தெரிவிக்கும் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு என்ன நடந்தது எதற்காக இந்திய ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்பதை விசாரிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை பார்த்த இதர இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் – இலங்கை போட்டியை இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு இந்திய ரசிகர்கள் பார்க்க கூடாதா? அல்லது அப்போட்டியில் விளையாடும் அணிகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சட்டம் ஏதும் உள்ளதா? என்று சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்

Advertisement