
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலை பெற்ற அத்தொடரின் 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு தரம்சாலாவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ரீசா ஹென்றிக்ஸ் டக் அவுட்டானார். மறுபுறம் தடுமாறிய குவிண்டன் டீ காக்’கை 1 ரன்னில் காலி செய்த ஹர்ஷித் ராணா அடுத்து வந்த தேவால்ட் ப்ரேவிஸை 2 (7) ரன்னில் போல்டாக்கினார். அதனால் 7/3 என தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
ஆனால் எதிர்ப்புறம் ஸ்டப்ஸ் 9, கோர்பின் போஸ்க் 4, மார்கோ யான்சென் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இந்தப் பக்கம் முடிந்தளவு போராடிய கேப்டன் மார்க்ரம் அரை சதமடித்து 61 (46) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஃபெரிரா 20, அன்றிச் நோர்ட்ஜெ 12 ரன்களை எடுத்தும் 20 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் அபிஷேக் ஷர்மா அட்டகாசமாக விளையாடி 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 35 (18) ரன்கள் விளாசி கோர்பின் போஸ்க் வேகத்தில் அவுட்டானார். அவருடன் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் தடுமாற்றமாக விளையாடி 28 (28) ரன்களில் மார்கோ யான்சென் வேகத்தில் போல்ட்டானார்.
அடுத்து வந்த திலக் வர்மா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தடுமாறிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தடுமாறி 12 (11) ரன்னில் நடையைக் கட்டினார். இருப்பினும் அடுத்து வந்த சிவம் துபே 10* (4) ரன்கள் விளாசி போட்டியை முடித்தார். இறுதியில் திலக் வர்மா 25* (34) ரன்கள் எடுத்த உதவியுடன் 15.5 ஓவரில் 120/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: 117க்கு அவுட்.. முதல் வீரராக பாண்டியா 2 தனித்துவமான வரலாற்று சாதனை.. தெ.ஆ’வை சுருட்டிய இந்தியா
அதனால் 2 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று இந்தியா அசத்தியுள்ளது. அத்துடன் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக தோற்கடித்து இந்தியா அசத்தியுள்ளது. இதற்கு முன் 2015ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.