மலேசியாவில் ஐசிசி மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. அந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்திய அணி நிக்கி பிரசாத் தலைமையில் விளையாடியது. அவரது தலைமையில் லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கை அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 6 சுற்றில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தியது.
அடுத்ததாக செமி ஃபைனலில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12:00 மணிக்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் லீக், சூப்பர் 6, செமி ஃபைனலில் வென்று வந்த தென்னாபிரிக்க அணியை இந்தியா எதிர்கொண்டது.
இந்தியா அசத்தல்:
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அந்த வகையில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக மிக்கே வேன் வூர்ஸ்ட் 23, ஜெம்மா போத்தா 16 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக கொங்காடி திரிசா 3, வைஷ்ணவி சர்மா 2, ஆயுசி சுக்லா 2, பருனிக்கா சிசோடியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 83 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு தமிழக வீராங்கனை கமலினி 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
இந்தியா சாதனை:
ஆனால் மற்றொரு துவக்க வீராங்கனை கொங்காடி திரிஷா அதிரடியாக விளையாடி 8 பவுண்டரியுடன் 44* (33) ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய சனிக்கா சால்க் 26* (22) ரன்கள் எடுத்ததால் 11.2 ஓவரில் 84-1 ரன்கள் எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2025 ஐசிசி மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.
2023இல் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்தத் தொடரில் இந்தியா ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது இத்தொடரில் 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளுடன் கோப்பையை வென்ற இந்தியா இதையும் சேர்த்து அடுத்தடுத்த கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது. அத்துடன் 2 மகளிர் அண்டர்-19 டி20 உலகக்கோப்பைகளை அதுவும் அடுத்தடுத்து வென்ற முதல் அணியாக இந்தியா மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 5வது டி20 நடைபெறும் வான்கடே மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
மறுபுறம் 2023, 2024 உலகக் கோப்பை ஃபைனல்களில் தோற்ற தென்னாப்பிரிக்கா இத்தொடரிலும் தோற்று ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய திரிஷா ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார்.



