
பார்வையற்றவர்களுக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற்றது. அத்தொடரில் இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. அதில் இந்திய அணி தங்களது லீக் சுற்றில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆஸ்திரேலியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி நேபாளை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அடுத்ததாக அமெரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா கடைசி லீக் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த வகையில் லீக் சுற்றில் 5 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்ற இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெற்ற செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
இறுதியில் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 23ஆம் தேதி இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நேபாள் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவரிலேயே அதிரடியான ஆட்டத்தை 117/3 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக புலா சரேன் 4 பௌண்டரியுடன் 44* (27) ரன்கள் குவித்து அசர்த்தினார். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2025 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
சொல்லப்போனால் பார்வையற்றவர்களுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இப்போது தான் முதல் முறையாக நடைபெற்றது. அந்த முதல் தொடரையே இந்திய பெண்கள் அணி வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்கள். பார்வையில்லை என்றாலும் தன்னம்பிக்கை மற்றும் பயிற்சிகளால் இந்தியாவுக்கு பெருமையை சேர்த்த மகளிர் அணிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தெ.ஆ 489 ரன்ஸ்.. 7 சிக்ஸ்.. இந்தியாவை பந்தாடிய யான்சென்.. ஏபிடிக்கு நிகராக 2வது உலக சாதனை
இந்த வருடம் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் வென்ற இந்தியா சாதனை படைத்தது. சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்தியா சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் தற்போது பார்வையற்றவர்களுக்கான டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.