
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் இத்தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் ஓய்வு பெற்ற ரோஹித் மற்றும் விராட் கோலி இடம் பெறவில்லை. அதே சமயம் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஹர்டிக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற நிறைய தரமான வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
எனவே 2023 ஆசியக் கோப்பை ஃபைனல் போல இத்தொடரிலும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வெல்ல இந்தியா தயாராகியுள்ளது. மறுபுறம் சமீப காலங்களாகவே தடுமாறும் இலங்கை இம்முறை புதிய கேப்டன் அசலங்கா மற்றும் பயிற்சியாளர் சனாத் ஜெயசூர்யா தலைமையில் களமிறங்குகிறது. எனவே சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்த இலங்கையும் தயாராக உள்ளது.
பல்லக்கேல் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடர் ஜூலை 27, 28, 30 இன்றைய தேதிகளில் இலங்கையில் உள்ள பல்லக்கேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 2009இல் தோற்றுவிக்கப்பட்டு 35000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் 2011 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் இங்கே இதுவரை 23 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
அதில் 12 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளது. 8 முறை சேசிங் அணிகள் வென்றுள்ளன. 3 போட்டி மலையால் கைவிடப்பட்டது. இங்கு முதலும் கடைசியுமாக 2012இல் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை அணிகள் 29 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 19 வெற்றிகளும் இலங்கை 9 வெற்றியும் பெற்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
வெதர் ரிப்போர்ட்:
ஜூலை 27, 28 தேதிகளில் பல்லக்கேல் நகரில் 20% மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே முதல் 2 போட்டிகள் முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம். ஆனால் ஜூலை 30ஆம் தேதி 70% மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 3வது போட்டியில் கொஞ்சம் குறுக்கீடு ஏற்படலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
வரலாற்றில் பல்லக்கேல் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாகவே இருந்து வருகிறது. இங்கு நல்ல சமமான வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம்.
இதையும் படிங்க: 80 ரன்ஸ்.. வங்கதேசத்தை நாக் அவுட் செய்த இந்தியா.. பூஜா, ரேணுகா மாபெரும் சாதனை.. ஃபைனலில் யார்?
அதே போல புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் போட்டி நடைபெற நடைபெற மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் ஆதிக்கத்தை செலுத்தி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பார்கள். பல்லக்கேல் மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 161 ஆகும். இங்கு வரலாற்றில் அதிகமாக முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.