ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர்-19 அணி அங்கு முதலாவதாக ஒருநாள் தொடரில் விளையாடியது. அத்தொடரில் அபாரமாக விளையாடிய இளம் இந்திய அணி 3 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.
அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள இயன் ஹீலி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற ஆஸ்திரேலியா அண்டர்-19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியை நேர்த்தியாக பந்து வீசிய இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
இளம் இந்தியா அபாரம்:
அதிகபட்சமாக ஸ்டீவன் ஹோகன் 92 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக கிசான் குமார் 3, தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கி 428 ரன்கள் குவித்து முன்னிலைப் பெற்றது. இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்சி 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதத்தை அடித்து 113 (86) ரன்கள் குவித்தார்.
குறிப்பாக 78 பந்துகளில் 100 ரன்கள் குவித்த அவர் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற அண்டர்-19 டெஸ்ட் போட்டிகளில் வேகமான சதத்தை அடித்த வீரராக உலக சாதனையும் படைத்தார். அவருடன் வேதாந்தா திரிவேதி சதத்தை அடித்து 140 (192), கிளன் பட்டேல் 49 (49) ரன்கள் அசத்தினார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஹைடன் ஸ்கிலர் 3, கேப்டன் வில் மலஜ்ஜூக் 3, ஆர்யான் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இன்னிங்ஸ் வெற்றி:
அடுத்ததாக 185 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சில் ரன்கள் அடிக்க முடியாமல் முன்பை விட மோசமாக பேட்டிங் செய்தனர். அதனால் ஆஸ்திரேலிய அண்டர்-19 அணியை 49.3 ஓவரில் வெறும் 127 ரன்களுக்கு சுருட்டி வீசிய இளம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் வில் மலஜ்ஜூக் 22 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: 3 ஆவது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேலை தாண்டி குல்தீப் யாதவ் இடம்பெற இதுவே காரணம் – விவரம் இதோ
இந்தியா அண்டர் 19 அணிக்கு கிசான் குமார் 2, அன்மோல்ஜோத் சிங் 2, தீபேஸ் தேவேந்திரன் 3, கிளன் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அவர்களது உதவியால் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வெறும் 2.5 நாட்களில் ஊதித்தள்ளிய இந்திய அண்டர்-19 அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது. அத்துடன் 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரிலும் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.



