
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடம் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அதற்கு அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து அவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்படுவதாக கேப்டன் சூரியகுமார் அறிவித்தார். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்விலிருந்து மீண்டும் விளையாட வருவதால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டார்.
அதே போல அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி மீண்டும் அணிக்குள் வந்ததால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டார்கள். மிடில் ஆர்டரில் தடுமாறிய சஞ்சு சாசனையும் கழற்றி விட்ட இந்திய அணி ஜிதேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்தது. இது பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “டாஸ் தோற்றது பரவாயில்லை. ஏனெனில் நேற்று கொஞ்சம் பச்சையாக இருந்த பிட்ச் இன்று குழப்பத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கிறது”
“அதனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி. முதலில் பேட்டிங் செய்து பின்னர் ரன்களைக் கட்டுப்படுத்துவது நல்ல சவால். பனி சவாலாக இருக்கும். அதற்காக நீங்கள் ஓடி விட முடியாது. இங்கிருந்து அது நீண்ட நேரம் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த முக்கியமான தொந்தரவை சமாளிக்க நாங்கள் கவனம் செலுத்துகிறோம்”
“எனவே அதைப் பற்றி சிந்திக்காமல் சவாலாக எடுத்துக் கொள்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எங்களுக்கு நல்ல தொடர் அமைந்தது. தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடும் நாங்கள் அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளோம். எனவே உலகக் கோப்பைக்கு முன் 15 டி20 போட்டிகளில் விளையாடுவது நாங்கள் தயாராக நன்றாக உதவும்”
இதையும் படிங்க: இந்த டி20 தொடரில் சிறப்பாக விளையாடி சுப்மன் கில் அந்த இடத்தை உறுதிசெய்ய வேண்டும் – இர்பான் பதான் கருத்து
“பயமின்றி மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எங்கள் அணிக்கான செய்தியாகும். எங்கள் அணியின் தேர்வு தலைவலியாக இருந்தாலும் சாம்சன், குல்தீப், சுந்தர், ராணா ஆகியோர் இன்று விளையாடவில்லை” என்று கூறினார். இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), அக்சர் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்