ஒரு சீனியர் கூட இல்ல.. ஜிம்பாப்வே தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் இளம் அணியை அறிவித்த பிசிசிஐ

India Team
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதை முடித்துக் கொண்டு ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

பொதுவாகவே ஜிம்பாவே கொஞ்சம் கத்துக்குட்டி அணியாக கருதப்படுகிறது. அதனால் அந்த அணிக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது வழக்கமாகும். அந்த வகையில் இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணி:
அதன் காரணமாக சுப்மன் கில் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் அணியில் அசத்திய ரியான் பராக், ஹைதராபாத் அணியில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா, ஹைதராபாத் அணியில் அசத்திய நித்திஸ் ரெட்டி, சிஎஸ்கே அணியில் பந்து வீச்சில் ஓரளவு நன்றாக செயல்பட்ட துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் முதல் முறையாக இந்தியாவுக்கு தேர்வாகியுள்ளனர்.

மேலும் இந்த அணியில் ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடிய ருதுராஜ், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், முகேஷ் குமார், ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், கலீல் அஹ்மத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய துருவ் ஜுரேல் முதல் முறையாக டி20 அணியிலும் தேர்வாகியுள்ளார். இந்த அணியில் தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

முன்னதாக சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் தடுமாறும் சீனியர்களை கழற்றி விட்டு புதிய அணியை விளையாட வைக்குமாறு நிறைய கோரிக்கைகள் காணப்படுகின்றன. அதற்கான முதல் படியாக இத்தொடரில் சீனியர் வீரர்களை யாரையுமே தேர்வு செய்யாத பிசிசிஐ முழுவதுமாக இளம் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜூலை 6, 7, 10, 13, 14 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே – இந்திய அணிகள் ஹராரே நகரில் மோதுகின்றன.

இதையும் படிங்க: இன்னைக்கு விராட் கோலி அடிப்பாரு.. இந்தியா ஜெயிக்க அந்த ஆஸி வீரரை சீக்கிரம் அவுட்டாக்கனும்.. ஹர்பஜன் பேட்டி

அந்த தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல், நித்திஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், அவேஸ் கான், கலில் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே

Advertisement