தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் இந்திய மண்ணில் 15 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.
மறுபுறம் சொந்த மண்ணில் குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்த பிட்ச்சில் 2 அணிகளுமே தடுமாற்றமாக விளையாடின. அதில் தென்னாப்பிரிக்காவை விட 2வது இன்னிங்சில் மோசமாக விளையாடிய இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
இலங்கைக்கு கீழே:
இத்தனைக்கும் கடந்த 2024 நியூசிலாந்து தொடரில் இந்தியா ஒய்ட்வாஸ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்தது முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் சந்தித்த தோல்வியால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் இந்தியா சரிந்துள்ளது.
கடந்த இங்கிலாந்து தொடரில் 2 தோல்விகளைச் சந்தித்த இந்தியா கொல்கத்தா தோல்வியையும் சேர்த்து 3 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. அதே சமயம் இங்கிலாந்தில் 2, கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2 என இந்தியா மொத்தம் 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற மான்செஸ்டர் போட்டி டிராவில் முடிந்ததை ரசிகர்களால் மறக்க முடியாது.
புள்ளிபட்டியலில் விழுந்த இந்தியா:
அந்த வகையில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 52 புள்ளிகளை 54.1 சதவீதத்தில் பெற்றுள்ளது. அதனால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலிருந்த இந்தியா தற்போது இலங்கையைத் தாண்டி 4வது இடத்தில் விழுந்துள்ளது. மறுபுறம் இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா இதுவரை 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று 66.6% புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: கழுத்து வலியால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் சுப்மன் கில் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? – வெளியான தகவல்
முதலிடத்தில் ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 100% புள்ளிகளுடன் இருக்கிறது. 2 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்ற இலங்கை 66.6% புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் 50%, இங்கிலாந்து 43.3%, வங்கதேசம் 16.6% புள்ளிகளுடன் 5, 6, 7 வது இடங்களில் உள்ளன. ஏற்கனவே 2024இல் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய இந்தியா தற்போதைய பட்டியலிலும் 4வது இடத்தில் விழுந்து பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



