என்னைவிட இப்போதைய புதிய கேப்டன் – பயிற்சியாளர் கூட்டணி அசத்துறாங்க, ரவி சாஸ்திரி வெளிப்படையாக பேசியது இதோ

shastri
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்து லீக் சுற்றுடன் நடையை கட்டிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களது தலைமையில் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியே அடையாமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.

dravid

- Advertisement -

மேலும் இங்கிலாந்தின் பஸ்பால் என்ற விளம்பர அதிரடியை போல் அல்லாமல் தேவைப்படும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறும் பெரும்பாலான தருணங்களில் அதிரடியாகவும் விளையாடும் குணத்தை இந்த புதிய கூட்டணி இந்திய அணியில் விதைத்துள்ளது. அதன் பயனாக இவர்களது தலைமையில் அடிக்கடி கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் நிகழ்ந்தாலும் முடிவில் பாரபட்சமில்லாமல் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே இந்தியா பெற்று வருகிறது. இதனால் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரது புதிய கூட்டணி 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பையையும் 2013க்குப்பின் எந்த ஒரு உலகக் கோப்பையையும் வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்தியாவின் சோதனை காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயனில்லா கூட்டணி:
இந்த கூட்டணிக்கு முன்பாக 2017 முதல் விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோரது தலைமையில் விளையாடிய இந்தியா சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்டு எதிரணிகளை பந்தாடியது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பதிவு செய்தது சாதனை படைத்தது. ஆனால் முக்கியமான ஐசிசி உலக கோப்பை தொடர்களில் நாக்-அவுட் அல்லது பைனல்களில் மண்ணை கவ்விய இந்த கூட்டணி புள்ளிவிவர அடிப்படையில் வெற்றிகரமாக இருந்தாலும் பயனில்லாத ஒன்றாகவே செயல்பட்டது.

shastri 1

இந்நிலையில் போட்டியின் சூழ்நிலை எப்படி இருந்தாலும் களமிறங்கும் அத்தனை பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ள தற்போதைய புதிய தலைமை கூட்டணியின் அணுகுமுறை சரி தான் என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி இதை தொடர்ச்சியாக செய்து வெற்றி காண வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் தங்களை விட தற்போதுள்ள கூட்டணி சிறப்பாக செயல்படுவதால் இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஆதரவளித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்கள் இந்த அணுகுமுறையை மாற்றக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தபோது கூட லோயர் ஆர்டரில் இருந்த வீரர்களை கருத்தில் கொண்டு அதிரடியாக விளையாடுவதற்கு நாம் பயந்தவர்களாக இருக்கிறோமே என்பதைப் பற்றி விவாதித்தோம். எனவே தற்போதைய அணுகுமுறை மிகவும் சரியானது. இதில் நீங்கள் இடையே சில போட்டிகளை தோற்கலாம். ஆனால் ஒரு முறை இந்த அணுகுமுறையை வைத்து நீங்கள் வெற்றிபெற தொடங்கிவிட்டால் அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கை பெரிய போட்டிகளிலும் அதே அணுகுமுறையை பயன்படுத்தி வெல்வதற்கு உதவும்” என்று கூறினார்.

Shastri

அவர் கூறுவது போல இந்த அதிரடி அணுகுமுறையால் ஆரம்பத்திலேயே 2 – 3 விக்கெட்டுகள் விழுந்தாலும் அதற்காக அஞ்சாமல் மிடில் ஆர்டரில் வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட நினைப்பதால் இந்த வருட டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே இதர அணிகளை காட்டிலும் இந்தியா அதிகமுறை 190+ ரன்களை குவித்து வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே இதே அணுகுமுறையை ஆசிய கோப்பையிலும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி இந்த வருடம் ஓய்வு மற்றும் காயம் காரணமாக அதிக டி20 போட்டிகளில் விளையாடாத விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அதற்கு தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அனுபவம் வாய்ந்த அவர்களால் எளிதாக இந்த அணுகுமுறையில் விளையாட முடியும். ஏராளமான ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்களுக்கு இந்த அணுகுமுறையில் விளையாட கடினமாக இருக்காது. பண்ட், பாண்டியா, ஜடேஜா ஆகியோரும் இருப்பதால் இம்முறை நமது டாப் ஆர்டர் சொதப்பினாலும் மிடில் ஆர்டர் தாங்கிப் பிடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு பேட்டிங் வரிசையில் ஆழம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement