நியூசிலாந்துக்கு பயணித்து பங்கேற்ற டி20 தொடரை 1 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இளம் இந்திய அணி அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 1 – 0 (3) என்ற கணக்கில் நழுவ விட்டது. இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இந்த சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், உம்ரான் மாலிக் என சிறப்பாக செயல்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக செயல்பட்டது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் காயத்தால் வெளியேறி பின்னர் தன்னுடைய 2வது ஒருநாள் போட்டியை 4 வருடங்கள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடினார்.
அதன்பின் நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரில் காயமடைந்து வெளியேறிய அவர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட தேர்வானாலும் கடைசி நேரத்தில் காயமடைந்து மீண்டும் வெளியேறினார். ஒரு வழியாக அதிலிருந்து குணமடைந்து இந்த தொடரில் விளையாடிய அவர் முதல் போட்டியில் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 16 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37* ரன்களை 231.25 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியா 306 ரன்கள் குவிக்க உதவினார்.
சச்சின் வரிசையில்:
அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தவிர்த்து சூரியகுமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 200 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட இந்தியாவுக்கு நங்கூரமாக நின்று 51 ரன்கள் குவித்த அவர் ஓரளவு மானத்தை காப்பாற்றி சிறப்பாக செயல்பட்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி இப்படி பேட்டிங்கில் அசத்திய அவர் பந்து வீச்சிலும் பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை முழுமையாக பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். அந்த வகையில் நல்ல சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் அவர் வருங்காலங்களில் நிறைய வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒரு காலத்தில் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது சச்சின், சேவாக், ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்களாக மாறி விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்று கொடுப்பார்கள். ஆனால் சமீப காலங்களில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதை செய்ய தவறியதே ஐசிசி தொடர்களில் குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைவதாக அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் விமர்சித்தனர். இந்நிலையில் அந்த பிரச்சனைக்கு தீர்வாக வாஷிங்டன் சுந்தர் வந்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து 2023 உலகக்கோப்பையில் விளையாட வைக்க முயற்சிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி நேற்றைய போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் பிரகாசமாக செயல்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் இந்த ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் அழகாக செயல்பட்டார். அதே போல் நல்ல பவுலராக இருக்கும் அவர் பவர் பிளே ஓவரில் அசத்தும் திறமை பெற்றுள்ளார். அந்த வகையில் இளம் வீரராக இருக்கும் அவர் முதிர்ச்சியானவராக வளர்ந்து வருகிறார். அவரால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்”
“ஏனெனில் 2010க்கு முன்பிருந்த இந்திய அணியை நீங்கள் பார்க்கும் போது நிறைய பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் யுவராஜ் சிங், சௌரவ் கங்குலி போன்றவர்கள் முக்கிய நேரங்களில் பந்து வீசுவார்கள். ஆனால் இப்போதைய அணியில் பேட்ஸ்மேன்கள் யாருமே பந்து வீசுவதில்லை. அதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமல் போனால் நமக்கு 6 அல்லது 7வது பவுலர் கிடைக்காத துரதிஷ்டவசம் ஏற்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் கவனத்தைச் செலுத்தி 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்க்க வேண்டும்” என்று கூறினார்.