ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் எட்டாம் தேதி சார்ஜாவில் நடைபெற்ற பத்தாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் போராடி 148-8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பெத் மூனி 40, எலிஸ் பெரி 30 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக எமிலியா கெர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 149 ரன்களை துரத்திய நியூசிலாந்து முழுமூச்சுடன் போராடியும் ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் 19.2 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 20, எமிலியா கெர் 29 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவின் வாய்ப்பு:
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேகன் ஸ்கட் 3, அனபல் சதர்லாந்து 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரலியா அடுத்தடுத்த வெற்றிகளுடன் குரூப் ஏ பிரிவில் 4 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் இந்தியாவிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றும் நியூசிலாந்து அணியின் ரன்ரேட் (-0.050) இந்தியா (-1.217), இலங்கைக்கு (-1.667) கீழே செல்லவில்லை. அதனால் இந்திய அணி செமி ஃபைனல் செல்வதற்கு தங்களது கடைசி 2 போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெல்ல வேண்டும். மேலும் ரன்ரேட்டை அதிகரிப்பதற்காக அந்த 2 போட்டிகளிலும் இந்தியா பெரிய வெற்றிகளை பெற வேண்டும்.
ஆர்சிபி போல:
மறுபுறம் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் அதே 2 புள்ளிகளை கொண்டிருந்தாலும் நல்ல ரன்ரேட்டை (+0.555) கொண்டுள்ளது. அதனால் அந்த அணி தன்னுடைய கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை வெல்லும் பட்சத்தில் செமி ஃபைனல் சென்று விடும். இது போக நியூசிலாந்து அணி தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் ரன் ரேட் காரணமாக இந்தியாவை முந்தி செமி ஃபைனல் செல்ல வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டியில் மேலும் ஒரு இந்திய வீரருக்கு அறிமுக வாய்ப்பு – விவரம் இதோ
அதே சமயம் இன்னும் வெற்றியே பெறாத இலங்கையும் கடைசி 2 போட்டிகளில் வென்று பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்திய அணிகள் மேற்கொண்டு 1 வெற்றி மட்டுமே பெற்றால் செமி ஃபைனல் செல்ல வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ரன்ரேட் தான் செமி ஃபைனல் செல்லப் போகும் அணியை தீர்மானிக்கும். எனவே இந்தியா தங்களது கடைசி 2 போட்டியிலும் பெரிய வெற்றி பெறுவது அவசியமாகும். மொத்தத்தில் மகளிர் அணியின் சுமாரான ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்களை போல் கால்குலேட்டர் கையுமாக சுற்ற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



