144/6 டூ 376.. இந்திய மண்ணில் வரலாறு படைத்த வங்கதேச பவுலர்.. 53 வருடத்துக்கு பின் இந்தியா அபார கமபேக்

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 6, விராட் கோலி 6, சுப்மன் கில் 0 ரன்களில் ஹசன் மஹ்முத் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.

அதனால் 34-3 என தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்திய அணிக்கு நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 56, ரிசப் பண்ட் 39, ராகுல் 16 ரன்களில் அவுட்டானார். அதன் காரணமாக 144-6 என மீண்டும் தடுமாறிய இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வங்கதேச பவுலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

இந்தியாவின் கம்பேக்:

அதில் தன்னுடைய சொந்த ஊரான சென்னையில் அபாரமாக விளையாடிய அஸ்வின் சதமடித்தார். அவருடன் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா இன்றைய 2வது நாளில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 86 ரன்களில் அவுட்டான அவரைத் தொடர்ந்து வந்த ஆகாஷ் தீப் 17, ஜஸ்ப்ரித் பும்ரா 7 ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 113 ரன்களில் அவுட்டாகி தமது சொந்த ஊரில் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் திரும்பினார். அதனால் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த வகையில் 144-6 என தடுமாறிய இந்தியா மேற்கொண்டு 232 ரன்கள் குவித்து இப்போட்டியில் அபார கம்பேக் கொடுத்துள்ளது.

- Advertisement -

ஹசன் மஹ்முத் சாதனை:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த பின் 2வது அதிகபட்ச ரன்கள் குவித்து இந்தியா அசத்தியுள்ளது. இதற்கு முன் கடந்த 1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் இந்தியா 70-6 என சரிந்த பின் மேற்கொண்டு போராடி 277 ரன்கள் குவித்ததே முதல் அதிகபட்ச ரன்களாகும்.

இதையும் படிங்க: 154 ரன்ஸ்.. லபுஸ்ஷேன் தனித்துவ உலக சாதனை.. இங்கிலாந்தை வெளுத்த ஹெட் மாபெரும் சாதனை.. ஆஸி வெற்றி

மறுபுறம் வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வங்கதேச பவுலராக ஹசன் மஹ்முத் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த வங்கதேச பவுலரும் இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. மேலும் டேல் ஸ்டைனுக்கு (2006ஆம் ஆண்டு) பின் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

Advertisement