ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணிக்கு நித்திஷ் ரெட்டி அறிமுகமாக களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்திலேயே மழை வந்ததால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார் மறுபுறம் தடுமாறிய கேப்டன் சுப்மன் கில் 10 ரன்னில் அவுட்டானதால் 25/3 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது.
விளையாடிய மழை:
அப்போது மீண்டும் மழை வந்ததால் 35 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் நங்கூரமாக விளையாட முயற்சித்த ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் நடையைக் கட்டினார். மறுபுறம் அக்சர் பட்டேல் நிதானமாக விளையாட முயற்சித்த போது மீண்டும் மழை வந்தது. அதனால் ஆட்டத்தை 32 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைத்தது.
அப்போது எதிர்புறம் களமிறங்கியிருந்த கேஎல் ராகுல் அடுத்தடுத்த சிக்ஸர்களுடன் அதிரடியை துவங்கினார். எதிர்ப்புறம் நிதானமாக விளையாடிய அக்சர் பட்டேல் 31 (37) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அப்போது மீண்டும் மழை வந்ததால் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது ரசிகர்களை கடுப்பேற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னில் அவுட்டாகி திரும்பினார்.
இந்தியா 136 ரன்ஸ்:
மறுபுறம் தொடர்ந்து அசத்திய கே.எல் ராகுல் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 (31) ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் நித்திஷ் ரெட்டி 19* (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 136/9 ரன்களை குவித்து ஓரளவு அசத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்தியூ குன்னேமான் 2, மிட்சேல் ஓவன் 2, ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: பெர்த் மைதானத்தில் இன்று அறிமுகமானதன் மூலம் நிதீஷ் ரெட்டி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
இதைத்தொடர்ந்து டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருக்கிறது. கூடவே மழை பொழிவதற்கான சூழ்நிலையும் இருக்கிறது. அதனால் இப்போட்டியில் இந்தியா சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.



