PAK vs AFG : மொத்தமாக தகர்ந்த கனவு – ஆசிய கோப்பை பைனலில் விளையாடும் அணிகள் இதோ

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India
- Advertisement -

அனல் பறக்க ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 7ஆம் தேதியான நேற்று நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி வெறும் 129/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ஹசரதுல்லா 21 (17) குர்பாஸ் 17 (11) என சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் மிடில் ஆர்டரில் இப்ராஹிம் ஜாட்ரான் 35 (37), ஜானத் 15 (19), நஜிபுல்லா ஜாட்ரான் 10 (11) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரீஸ் ரவூப் 2 விக்கெட்டுக்கள் எடுத்தார். அதை தொடர்ந்து 130 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஓவரிலேயே கேப்டன் பாபர் அசாம் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதைப் பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் மேலும் தரமாக பந்துவீசி பக்கார் ஜமான் 5, முகமத் ரிஸ்வான் 20, அஹமத் 30, சடாப் கான் 30 என முக்கிய வீரர்களை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் சீரான இடைவெளியில் அவுட் செய்தது.

- Advertisement -

போராடிய ஆப்கானிஸ்தான்:
அதனால் போட்டியின் ஆப்கானிஸ்தானில் கை ஓங்கிய நிலையில் முகமத் நவாஸ் 4, ஆசிப் அலி 16, குஷ்தில் ஷா 1, ஹாரீஸ் ரவூப் 0 என அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இறுதியில் 9 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்ததால் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய பரூக்கி யார்கர் வீச முயற்சித்து தவறிப்போய் ஃபுல் டாஸ் பந்துகளாக வீசினார்.

அதை எதிர்கொண்ட டெயில் எண்டர் நசீம் ஷா முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்கவிட்டு வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் அஹமத் 3 விக்கெட்களும், பரூக்கி 3 விக்கெட்களும், ரசித் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்து போராடி ஆப்கானிஸ்தானின் போராட்டம் கடைசி ஓவரில் வீணானது. முன்னதாக இதே தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து.

- Advertisement -

வெளியேறிய இந்தியா:
அதனால் ஏற்கனவே இந்தியா பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு 99% காலியான நிலையில் எஞ்சிய 1% வாய்ப்பு ஆப்கானிஸ்தான் கையில் இருந்தது. அந்த நிலைமையில் நேற்றைய போட்டியில் 39 ஓவர்கள் வரை அற்புதமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் தங்களுடைய வெற்றிக்கும் இந்தியாவின் வெற்றிக்கும் சேர்த்து போராடியது. அதனால் அதிர்ஷ்டம் கை கொடுத்து விடும் போலயே என்ற குருட்டு நம்பிக்கை வைத்த இந்திய ரசிகர்களின் கனவு கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் தோற்றதால் சுக்குநூறாக உடைந்து போனது.

ஏனெனில் இப்போட்டியில் போராடி திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஏற்கனவே தனது முதல் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவை தோற்கடித்த காரணத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து இந்தியாவையும் தோற்கடித்த இலங்கையும் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இதுவரை சூப்பர் 4 சுற்றில் எந்த வெற்றிகளையும் பதிவு செய்யாத இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களது கடைசி போட்டியில் நேருக்கு நேர் மோதுவதற்கு முன்பாகவே இந்த தொடரிலிருந்து பரிதாபமாய் வெளியேறியுள்ளது இரு நாட்டைச் சேர்ந்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாபெரும் பைனல்:
இதில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற இதர அணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கொண்டிருக்கும் காரணத்தால் ஆரம்பத்தில் கோப்பையை எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா இன்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை முடித்துக் கொண்டு நாடு திரும்ப இப்போதே பெட்டி படுக்கையை கட்ட வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அனல் பறக்கும் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானும் இலங்கையும் வரும் செப்டம்பர் 11ஆம் தேதியன்று துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த தயாராகியுள்ளது.

Advertisement