இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி தோற்கும் என்று பல இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கணித்தார்கள். ஆனால் முதல் போட்டியிலேயே 5 சதங்கள் அடித்த இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது.
இருப்பினும் 7 கேட்ச்கள் தவற விட்டதால் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை சமன் செய்தது. குறிப்பாக கேப்டன் சுப்மன் கில் 430 ரன்கள் அடித்து பல சாதனைகளைப் புரிந்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்ற ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்தது.
இந்தியாவின் கம்பேக் கனவு:
அடுத்ததாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. அப்போட்டியில் வென்று கம்பேக் கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.
அதே போல கடைசிப் போட்டியிலும் வென்று 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா முயற்சிக்க உள்ளது. ஆனால் அதற்கு இந்தியா வரலாற்றில் செய்யாததை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆம் வரலாற்றில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் 2 – 1* என்ற கணக்கில் பின்தங்கிய பின் இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை.
1937 ஆஸ்திரேலியா போல:
ஒட்டுமொத்த வரலாற்றில் 1936/37 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா மட்டுமே தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 2 – 1 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தும் கடைசியில் 3 – 2 என கோப்பையை வென்றது. அதே போல 1992/93, 1998 ஆகிய வருடங்களில் 3 போட்டிகளின் முடிவில் 1 – 0 (5) என வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் பின்தங்கியிருந்தன. இருப்பினும் கடைசியில் 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவை தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் வென்றன.
இதையும் படிங்க: வடேகர், கபில் தேவ், டிராவிட் மாதிரி இங்கிலாந்தில் கில் அமைதியால் வரலாறு படைச்சுருக்காரு.. கவாஸ்கர் பாராட்டு
ஆனால் 3 போட்டிகளின் முடிவில் பின்தங்கிய எந்த 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா வென்றதில்லை. இது போக 4வது போட்டி நடைபெறும் மான்செஸ்டர் மைதானத்திலும் இந்தியா ஒருமுறை கூட இங்கிலாந்தை தோற்கடித்ததில்லை. இந்த பவிபரங்களை அறியும் பெரும்பாலான இந்திய ரசிகர்களால் “அப்படின்னா கம்பேக் முடிந்ததா” என்று சொல்லாமல் இருக்க முடியாது.



