
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரில் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் போராடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இங்கிலாந்து போராடாமலேயே 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வெளியேறியது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 5, 4 புள்ளிகளுடன் டாப் 2 பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றன.
மறுபுறம் குரூப் ஏ பிரிவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று செமி ஃபைனலுக்கு சென்றது. நியூசிலாந்து அணியும் தங்களது முதல் 2 போட்டிகளில் வென்று செமி ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது. நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் ஒரு வெற்றியை கூட பெறாமல் வெளியேறின.
அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி லீக் போட்டி மார்ச் 2ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். அதை வைத்தே செமி ஃபைனல் அணி தீர்மானிக்கப்படும். ஒருவேளை இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்து முதலிடம் பிடித்தால் குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.
ஒருவேளை நியூசிலாந்திடம் தோற்று 2வது இடம் பிடித்தால் தென்னாபிரிக்கா அணியை இந்தியா தங்களது செமி ஃபைனலில் எதிர்கொள்ளும். இந்நிலையில் இந்தியா தங்களது செமி ஃபைனல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை விட ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதையே விரும்பும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்கான இரண்டு காரணங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அந்த 2 அணிகளுமே நல்ல அணிகள். இந்தியா தாங்கள் எளிதாக வீழ்த்தக்கூடிய அணி என்று எந்த எதிரணிகளையும் நினைக்க மாட்டார்கள். ஏனெனில் நாக் அவுட் சுற்றில் வாழ்வா சாவா என்ற சூழ்நிலையே இருக்கும். எனவே இந்தியா எந்த அணியையும் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதை விரும்பலாம்”
இதையும் படிங்க: மாஸ்டர்ஸ் லீக்: 85க்கு அவுட்.. ராகுல் ஹாட்ரிக்.. சச்சினை அவுட்டாக்கி மன்னிப்பு கேட்ட பவுலர்.. தெ.ஆவை சாய்த்த இந்தியா
“ஏனெனில் சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவை அவர்கள் எதிர்கொண்டார்கள். தென்னாபிரிக்காவை 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா எதிர்கொண்டது. மேலும் ஆஸ்திரேலியா முதன்மை பவுலர்கள் இல்லாமல் விளையாடுகிறது. குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க், கமின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இல்லை. அதனால் அவர்களை செமி ஃபைனலில் எதிர்கொள்ள இந்தியா விரும்பலாம்” என்று கூறினார்.