மகளிர் உலகக்கோப்பை 2022 : போராட்டத்திற்கு மத்தியில் செமி பைனலுக்கு செல்லுமா? – விவரம் இதோ

Shafali Verma Women's World Cup 2022
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று துவங்கிய இந்த உலகக்கோப்பையில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த உலக கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலில் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது. அதன்பின் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பரிதாப தோல்வி அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று மீண்டெழுந்தது.

ICC Women's World Cup 2022

- Advertisement -

வாழ்வா – சாவா போட்டி:
அதன்பின் நடப்புச் சாம்பியன் வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் பரிதாப தோல்வி அடைந்த இந்திய அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பெற்றதால் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பில் தடுமாறி நிற்கிறது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பின் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளுக்கு எதிரான கடைசி 2 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற வாழ்வா – சாவா என்ற பரிதாப நிலைக்கு இந்திய மகளிர் அணி தள்ளப்பட்டது.

அப்படிப்பட்ட வேளையில் வங்கதேச அணிக்கு எதிரான தனது 5-வது லீக் போட்டியில் இந்தியா களமிறங்கியது. நியூசிலாந்தின் ஹமில்டன் நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Women's World Cup Cup

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு நட்சத்திர தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 42 பந்துகளில் 42 ரன்களும் ஸ்மிருதி மந்தனா 30 ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இந்தியா அபார வெற்றி:
இதனால் 74/3 என தடுமாறிய இந்தியாவை இளம் வீராங்கனை யஸ்டிக்கா பாட்டியா அரைசதம் அடித்து 50 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார். அடுத்து வந்த துணை கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் 14 ரன்கள், ரிச்சா கோஷ் 23 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஸ்னே ராணா 27 (23) ரன்களும் பூஜா வஸ்திரக்கர் 30* (33) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் செய்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த இந்தியா 229 ரன்கள் எடுத்தது.

Shafali Verma Women's World Cup 2022

அதை தொடர்ந்து 230 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்திய வங்கதேச அணி வீராங்கனைகள் ஆரம்ப முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 39 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சல்மா காட்டுன் 32 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அசத்திய இளம் வீராங்கனை ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளையும் ஜூலன் கோஸ்வாமி மற்றும் பூஜா வஸ்திரக்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன் வாயிலாக 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா வாழ்வா – சாவா என்ற முக்கியமான போட்டியில் வெற்றி பெற்று நிம்மதி அடைந்துள்ளது.

- Advertisement -

செமி பைனலுக்கு போக முடியுமா:
இந்த நிலைமையில் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகள் உட்பட 6 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதே புள்ளிகளைப் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4-வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியா பதிவு செய்த 3 வெற்றிகளுமே 100 ரன்களுக்கும் மேலான வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

Women's World Cup 2022 IND vs PAK

எனவே ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவிற்கு போட்டியாக இருக்கும் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளை காட்டிலும் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக வரும் மார்ச் 27-ஆம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் கடைசி லீக் போட்டியில் ஒரு நிச்சயமான வெற்றியை பதிவு செய்தால் இந்திய அணியால் எளிதாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட முடியும்.

இருப்பினும் அது அவ்வளவு சுலபமானது அல்ல என கூற வேண்டும். ஏனெனில் இந்தியாவை சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கனவே அரையிறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்த வலுவான அணியாக கருதப்படுகிறது. எனவே வலுவான தென்னாப்பிரிக்க அணியை சாய்த்து இந்த மகளிர் அணியினர் உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement