வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15வது முறையாக துபாயில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் 16வது தொடர் 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மொத்தமாக தடைபெற்ற சர்வதேச போட்டிகளை கடுமையான போராட்டத்திற்குப் பின் அந்நாட்டு வாரியம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அந்த வரிசையில் 2008க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வாரியம் போராடி வாங்கியது. அதே கூட்டத்தில் தான் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா பதவியேற்றுக்கொண்டார்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தின் முடிவில் இரு நாட்டுக்கிடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்றும் அதை பொது இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தத்தை கொடுப்போம் என்றும் ஜெய் ஷா அதிரடியாக அறிவித்தார். அதனால் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு அறிவிப்பை ஆசிய கவுன்சில் தலைவர் வெளியிட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் வாரியம் கூறியுள்ளது.
வாலாட்ட முடியாது:
மேலும் அதே 2023இல் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை உட்பட 2031 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஐசிசி தொடரிலும் பங்கேற்க பாகிஸ்தானும் வராது என அந்நாட்டு வாரியம் பதிலடியாகயான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்கவில்லை என்றாலும் திட்டமிட்டபடி தங்களது நாட்டில் வெற்றிகரமாக நடத்த இதர ஆசிய நாடுகள் பங்கேற்கும் கூட்டத்திற்கு அவசர ஏற்பாடு செய்வதாகவும் அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் 2023 உலகக்கோப்பையை விட தற்போது அக்டோபர் 23இல் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்காமல் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென அந்நாட்டவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படி என்ன பேசினாலும் இந்தியா எடுக்கப்போகும் முடிவையும் இந்தியாவையும் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஏனெனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு நிதியை கொடுக்கும் நாடாக இருக்கும் இந்தியா மற்ற நாடுகளைப் போல் அதில் கிடைக்கும் வருமானத்தை பங்கு போடுவதில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் பங்கு பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனால் இந்தியா சொல்வதை கேட்பதுடன் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் வந்தாக வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இல்லையேல் அந்நாட்டு வாரியம் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இந்தியா பங்கேற்காமல் போனால் 2023 ஆசிய கோப்பை மொத்தமாக நடைபெறாது. ஏனெனில் உலக கோப்பையுடன் ஒப்பிடும் போது ஆசிய கோப்பை சிறிய தொடர். அதே போல் உலகக்கோப்பையை நீங்கள் புறக்கணித்தால் அதில் பங்கேற்பதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் பங்குத் தொகை உங்களுக்கு கிடைக்காது”

“எனவே இதை நான் உறுதிபடச் சொல்கிறேன், 2023 ஆசிய கோப்பை பொதுவான இடத்தில் தான் நடைபெறும். ஏனெனில் ஆசிய கவுன்சில் என்பது பொதுவான அமைப்பு என்றாலும் அதிலிருந்து இந்தியா எந்த ஒரு தொகையையும் பெறுவதில்லை என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். 4 மில்லியன் அல்லது 8 மில்லியன் என ஆசிய கவுன்சிலிலிருந்து அதன் உறுப்பு நாடுகள் பெரிய தொகையை ஒவ்வொரு வருடமும் பங்கிட்டுக் கொள்கின்றன. ஆனால் அங்கே இந்தியா பங்கிட்டுக் கொடுக்கும் நாடாக மட்டுமே இருக்கிறது. ஏனெனில் ஆசிய கவுன்சிலின் பெரிய நண்பனாக இந்தியா இருந்து வருகிறது”
இதையும் படிங்க: தீப்தி சர்மா இடத்தில் இருந்தால் நீங்க ரன் அவுட் செய்திருப்பீர்களா – மன்கட் சர்ச்சைக்கு சச்சின் கூறும் பதில் இதோ
“அதனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என்று கருத்துக்கள் வந்தால் நிச்சயம் இந்தியா அங்கே செல்லாது என்று நான் பேப்பரில் எழுதிக் கொடுப்பேன். எனவே அடுத்த ஆசிய கோப்பை பொதுவான இடத்தில் நடைபெறுவதை பார்க்கலாம். அதேசமயம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்க நிச்சயம் வரும். இதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக இதுதான் நடக்கப் போகிறது” என்று கூறினார்.



